sai yoga centre

Friday, December 16, 2011

ஆறுபடைவீடும் ஆறு சக்கரங்களும்



திருபரங்குன்றம்: மூலவருக்கு இங்கு சுப்ரமணிய சுவாமி என்று நாமம். தேவசேனாதிபதி தேவசேனையை மணந்த தலம். தங்கள் அழுக்குகளை, மூலாதாரத்திற்கு கீழுள்ள சக்கரங்களை மறந்து, இறைவனுடம் இணைவதைக் குறிப்பது, தேவசேனை-திருமுருகன் திருமணம். இந்த தலத்தில் இருக்கும் கற்பக விநாயகனை முதலில் மனத்தில் இருத்தி, அவன் அருள் பெற்று, அறுபடைவீடு தரிசனத்தை துவங்குவோம். மூலாதாரத்தில் அவனுடன் இணைந்து, சரவணபவ எனும் திருநாமம் சொல்லி, மேலான நிலைகளை, சக்கரங்களை அடைவோம்.





திருச்செந்தூர்: மூலாதாரத்தில் துவக்கிய கனல்தனை வளர்த்து அடுத்த சக்கரமான சுவாதிஷ்டானத்தை அடைய, தவ நிலையில் ஜப மாலையுடன் நின்றிடும் மூலவர் பாலசுப்ரமணிய சுவாமியை துதித்திடுவோம். அலைகடல் ஓசை எப்போதும் ஒலித்துக்கொண்டே இருப்பதைப்போல ஓம்கார நாதம் எப்போதும் ஒலித்திக் கொண்டே இருப்பதைக் கவனிப்போம். பதஞ்சலி முனிவர் அருளியபடி ஓம்காரத்தினை ஒலித்திட, ரீங்காரமாய் சுழலாதோ சுவாதிஷ்டானம் திருச்செந்தூரில்.





பழனி - தியான மலை : பழனி மலையில் தண்டாயுதபாணி போகரின் யோகமதில் அருமருந்தாய் ஔஷதமாய் உறைகிறான்.


அவன் ராஜ அலங்காரத்தில் கம்பீரமாகவும், காந்தமாகவும் இருக்கிறான், இழுக்கிறான். ராஜ யோகத்தில் மணிப்பூரத்தில் ஏற்படும் பயத்தினை நீக்கிட, 'யாமிருக்க பயமேன்?" என அபயம் காட்டுகிறான் பழனி மலையில் ஞான பண்டிதன்.





சுவாமிமலை: காவிரிக் கரையில் திருவேரகத்தில் அருளும் சுவாமிநாதன். அருணகிரியார் நாதனை திருப்புகழால் பாடிய அருந்தலம்.


இங்குள்ள கொடிமரத்தடியில் அமர்ந்து தியானம் செய்வது ஏற்றது. சுவாமிநாதனின் உபதேச மந்திரம் ஓம் ச-ர-வ-ண-ப-வ. இம்மந்திரத்தை தொடர்ந்து தியான நிலையில் ஒலிக்க, இதயக் கமலமாம் அனஹதத்தில் ஒளிர்வான் சரவணன். இங்கே மலையாகிய ஞானமதை நொடிப்பொழுதில் அடைந்திட இயலும்.


மிகவும் சக்தி வாய்ந்த இந்த மந்திரப் பிரயோகத்தினால், அவரவர் அகத்திலேயே ஆறு சக்கரங்களில் அறுபடை வீடுகளின் தரிசனம் பெறலாம்.





திருத்தணிகை: குன்றுதோறாடல் என திருமுருகாற்றுப்படையில் அழைக்கப்படும் இந்த தலத்தில் காப்பாற்றும் கடவுளாக ஆதிமுதலே வணங்கப்பட்டவன்.


குளுமையும் அமைதியும் தவழும் இடமாதலால், விசுத சக்ரத்தில் தூய அன்பினைக் கொண்டு முருகனை அடைய ஏற்ற இடம். தன் உணர்வையெல்லாம் மறந்து இறை உணர்வு மட்டுமே இருத்தி, எல்லாவற்றிலும் முருகானாக ஆனந்த பரவசத்தினை அடைய ஏற்ற இடம்.


இந்த தலத்தின் விசேஷம் - கல் வேல் - முருகனின் வேலே முருகனாக ஆதிமுதல் வழிபட்ட இடம். அஞ்ஞானத்தை கூரிய வேலால் பிளந்து உள்ளொளி பெருகிட வழி வகுக்கும்.





பழமுதிர்ச்சோலை: அடுத்ததாக ஆக்ஞை சக்கரத்தில் அவன் அருள் பெருவதற்கு ஏற்ற தலம் பழமுதிர்ச்சோலை.


வீசிய வேல், கார்த்திகேயனின் கையிலேயே திரும்பி வருவதுபோல், எழுப்பிய குண்டலினி சக்தி நம் அஞ்ஞானத்தை அழித்து, ஞானமாக நமக்கு திரும்பித் வருவதைக் குறிக்கும்.


கணபதியின் துணையுடன் வல்வினைகளை வென்று, மேற்சொன்ன ஆறு சக்ரங்களை ஆறு முகன் துணையுடன் அடைந்து, அஞ்ஞானம் என்னும் இருளினை அகற்றி சாதகன் ஒருவன் தன்னைத் தானே தயார் செய்து கொள்கிறான்.


பின் நன்றாக பக்குவப்பட்டபின், இறுதியாக கடைசி சக்ரமான சகஸ்ர சக்ரத்தில், பரமன் சிவனை அண்ட சராசரங்களிலும் நிறைந்திருக்கும் சைதன்யமாக உணர்வதாகும், திரை விலகி, தானும் அந்த பிரம்மமாக இருக்கிறேன் என்கிற உண்மை அறிவினை உணர்வதும் இறுதியாகும்.பழனிபழமுதிர்ச்சோலைதிருபரங்குன்றம்திருத்தணிகைசுவாமிமலைதிருச்செந்தூர்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.