sai yoga centre

Showing posts with label திருக்கார்த்திகை. Show all posts
Showing posts with label திருக்கார்த்திகை. Show all posts

Thursday, December 8, 2011

கார்த்திகை தீபம் கொண்டாடும் பிற கோயில்கள்!


அம்மனுக்கு ஆராட்டு!
திருவண்ணாமலை-வேலூர் ரோட்டில் சந்தவாசல் என்ற இடத்திலிருந்து படவேடு செல்லும் வழியில் 1 கி.மீ. தொலைவில் கங்காதேவி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்குப் பின்புறம் ராஜகம்பீரமலை உள்ளது. பூலோகம் வந்த சிவன், முதலில் இந்த மலையிலும், அடுத்து திருவண்ணாமலையிலும் பாதம் பதித்தாராம். மிதிமலை என்று அழைக்கப்படும் இந்த மலையில் சிவன் பாதச்சுவடு காணப்படுகிறது. திருக்கார்த்திகைக்கு மறுநாள் கைசிக கார்த்திகையன்று இந்த மலையில் விஷ்ணு தீபம் எனப்படும் தீபத்திருவிழா வெகு விமர்சையாக நடக்கும். மீனாட்சியம்மன், கேரளா குமாரநல்லூரில் பகவதி எனும் திருநாமம் தாங்கி கோயில் கொண்டுள்ளாள். கோட்டயத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலுள்ள இக்கோயிலில், கார்த்திகையில் 10 நாள் விழா நடக்கிறது. ஒன்பதாம் நாளான கார்த்திகையன்று ஆராட்டு பூஜை நடக்கிறது. அன்று 36 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் பிரமாண்டமான அன்னதானம் கோயிலில் நடைபெறும். பகவதி எழுந்தருளும் நிகழ்ச்சியில் பெண் யானைகள் ஊர்வலமாக அழைத்துவரப்படும்.
திருச்செந்தூரில் திருக்கார்த்திகை தினத்தன்று ஜெயந்திநாதர் சண்முக விலாசத்தில் எழுந்தருள்வார். அன்று கடற்கரையில் பனை ஓலையால் சொக்கப் பனை கொளுத்துவார்கள். பின் சாம்பலைக் கரைத்து ஜெயந்திநாதருக்கு பொட்டு வைப்பார்கள். சொக்கப் பனை ஓலைச் சாம்பல் உழவர்களுக்கு கொடுக்கப்படும். விளைநிலங்களில் இந்த சாம்பலைத் தூவினால் நன்றாகப் பயிர் வளரும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை.
வந்தாச்சு யோகம்!
வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் கோயிலில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நீண்ட நேரமாக எரிந்ததால், அது அணையும் நிலையில் மிகக்குறைவான சுடருடன் எரிந்தது. அவ்விளக்கில் இருந்த நெய்யை உண்பதற்காக ஒரு எலி தீபத்தை நோக்கி தாவியது. அப்போது எலி தன்னை அறியாமலேயே திரியை தூண்டிவிட்டது. இந்த எலிதான் அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக பிறந்து, வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தால் மோட்சம் அடைந்தது. தெரியாமல் திரியை தூண்டிவிட்ட எலிக்கே ராஜயோகம் கிடைத்தது என்றால், மானிட ஜென்மம் எடுத்த நாம், கோயில்களில் விளக்கேற்றி வழிபட்டால் நமக்கு கிடைக்கும் பலனுக்கு அளவே இருக்காது.
தீபஒளியில் ஜொலிக்கும் சிவன்மலை!
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள சிவன்மலையில் அமைந்துள்ளது சுப்ரமணிய சுவாமி திருக்கோயில். இங்கே, வள்ளி-தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார் முருகப் பெருமான். ஆஞ்சநேயர், இந்தத் தலத்துக்கு வந்து முருகக் கடவுளை வணங்கிச் சென்றதாகத் தெரிவிக்கிறது ஸ்தல புராணம். சிவவாக்கியர் எனும் சித்தர், இந்த மலையில் நெடுங்காலம் தங்கியிருந்து கடும் தவம் செய்தார் என்பதால், இந்த மலை சிவன்மலை என அழைக்கப்படுகிறது. தந்தையின் பெயரில் மலை அழைக்கப்பட்டாலும்... இங்கு மலை மீது குமரனே கோயில் கொண்டுள்ளார்.பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி என விழாக்கள் பலவும் விமரிசையாக நடைபெறும் இந்தக் கோயிலில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா மிகப் பிரமாண்டமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், சிவன் மலையே விளக்குகளால் ஜொலிப்பது, கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.
கார்த்திகைக்கு முதல் நாள் பரணி தீபமும், 2-ஆம் நாளான திருக்கார்த்திகை நாளில் கார்த்திகை தீபமும், 3-ஆம் நாளில் ரோகிணி தீபமும் ஏற்றி, முருகக்கடவுளுக்குச் சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். கார்த்திகை மற்றும் ரோகிணி நட்சத்திரக்காரர்கள் இங்கு வந்து வணங்கி, வழிபட்டால் சகல விதமான தோஷங்களில் இருந்தும் விடுபடுவார்கள் என்பது ஐதீகம்! மேலும், திருக்கார்த்திகை தீபத் திருநாளில், கார்த்திகேயக் கடவுளை வணங்கி வழிபட்டால், திருமண பாக்கியம் கிடைக்கும்; அழகன் முருகனைப் ÷ளை பாக்கியம் இல்லையே எனக் கலங்குவோர், ஆறு நெய் விளக்குகளேற்றி, ஆறு வகைப் பழங்களால் நைவேத்தியம் செய்து, ஆறு வகைப் பூக்களால் அர்ச்சித்து, ஆறு வாரங்கள் தொடர்ந்து ஆறுமுகனை வழிபட்டு வந்தால், விரைவில் திருமணம் நடந்தேறும்; மனம் போல் மாங்கல்யம் கிடைக்கப் பெறுவார்கள்.
அங்கே அண்ணாமலை தீபம்! இங்கே சுவாமிமலை தீபம்!
ஆறுபடை வீடுகளில், முருகப்பெருமான் ஞான குருவாகத் திகழும் திருத்தலம் சுவாமிமலை. பிரணவ மந்திரத்தை எடுத்துரைத்த ஒப்பற்ற திருவிடம் இது!
சோழ தேசத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, வெகு விமரிசையாகவும் கோலாகலமாகவும் நடைபெறும் முக்கியமான - முதன்மையான தலம், சுவாமிமலை எனப் போற்றுகின்றன ஞானநூல்கள். தந்தையார் அருணாசலேஸ்வரராகக் குடிகொண்டிருக்கும் திருவண்ணாமலைக்கு நிகராக, இங்கே மைந்தனின் ஆலயத்தில் விமரிசையாக நடந்தேறும் திருவிழா, எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். கோயில் நகரமாம் கும்பகோணத்தின் மிக அற்புதமான இந்தத் தலத்தை, திருமுருகாற்றுப்படையில் திருவேரகம் எனப் போற்றிப் பாடுகிறார் நக்கீரர். சுவாமிநாத ஸ்வாமியை வணங்கினால், புத்தியில் தெளிவும் ஞானமும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்! அதுமட்டுமா! வஜ்ர தீர்த்தம், குமாரதாரை தீர்த்தம், சரவண தீர்த்தம், நேத்திர புஷ்கரணி, பிரம்ம தீர்த்தம் என ஐந்து தீர்த்தங்கள் கொண்ட அற்புதமான திருத்தலம் சுவாமிமலை எனப் போற்றுகின்றனர் ஞானகுருமார்கள்.
சுகப்பிரம்ம மகரிஷி, இங்கேதான் முருகக் கடவுளை நினைத்து தவம் செய்து, வீடுபேறு பெற்றார்; இந்தத் தலத்துக்கு வந்து சுவாமிநாத ஸ்வாமியை மனமுருக வேண்டிக்கொண்டால், எதிரிகள் தொல்லையில் இருந்து தப்பலாம்; தீர்த்தத்தில் நீராடித் தொழுதால், ஏழேழு பிறவிகளில் செய்த பாவங்களும் விலகும் என்கிறது ஸ்தல புராணம். இத்தனை பெருமைகள் கொண்ட சோழ தேச கோயிலில், வருடத்துக்கு மூன்று முறை பிரம்மோத்ஸவ விழாக்கள் நடைபெறுகின்றன. இங்கே, திருக்கார்த்திகைத் தீபத் திருவிழாவின்போது, பல ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கந்தனைத் தரிசிக்க வருவார்கள். கார்த்திகைப் பெண்களால் வளர்ந்து, கார்த்திகேயன் எனும் திருநாமமும் பெற்ற சுவாமிநாத ஸ்வாமியை கார்த்திகை தீபத் திருநாளில் வணங்குங்கள்.
சிவ ஆலயங்களில் கார்த்திகை
திருவாசகத்தை அருளிய மாணிக்க வாசகருக்கு ஈசனே குருவாக வந்து குருந்த மரத்தடியில் உபதேசம் செய்த தலம், திருப்பெருந்துறை. இக்கோயிலில் ஆகம தத்துவங்களை விளக்கும் வகையில் தீபங்களை வகை வகையாக அமைத்துள்ளனர். 27 நட்சத்திரங்கள், 3 மூர்த்திகள், 36 தத்துவங்கள், 5 கலைகள், 51 வர்ணங்கள், 87 உலகங்கள், 11 மந்திரங்கள் என ஒவ்வொன்றையும் விளக்கும் வகையில் இவ்விளக்குகள் அமையப் பெற்றுள்ளன. 27 நட்சத்திர தீபங்களை கருவறையில் ஏற்றியுள்ளனர். உலகைப் படைத்து, காத்து, அழித்து வழிநடத்தும் மும்மூர்த்திகளைக் குறிக்க 3 தீபங்களை ஏற்றி கருவறையில் மஞ்சள், பச்சை, சிவப்பு நிற கண்ணாடிப் பெட்டியில் வைத்துள்ளனர். 36 தத்துவங்களைக் குறிப்பதாக 36 தீபங்களை தீப மாலையாக தேவ சபையில் ஏற்றி வைத்துள்ளனர். 5 வகை கலைகளைக் குறிக்க 5 தீபங்களை கருவறையில் ஒன்றின் கீழ் ஒன்றாக ஏற்றியுள்ளனர். 51 எழுத்துகளைக் கொண்டது வர்ணம். இதைக் குறிக்க 51 தீபங்களை கருவறை முன் உள்ள அர்த்த மண்டபத்தில் ஏற்றி வைத்துள்ளனர்.
உலகங்கள் 87. இதைக் குறிப்பதற்கு கனக சபையில் குதிரைச் சாமிக்கு அருகே 87 தீபங்களை ஏற்றி வைத்துள்ளனர். மந்திரங்களைக் குறிக்க 11 விளக்குகளை நடனசபையில் ஏற்றி வைத்துள்ளனர். இப்படி தேவர்களை திருவிளக்குகளாக அமைத்து தீபமாக ஏற்றி வைத்துள்ளனர். இப்படிப்பட்ட அதிசய அமைப்பு தீபங்களை ஆவுடையார் கோயிலில் மட்டுமே தரிசிக்க முடியும். ஒரு லட்சம் விளக்குகளால் ஆலயத்தை அலங்கரிப்பது லட்சத் தீபவிழா. மயிலாப்பூரில் ஆண்டுதோறும் இது நடக்கும். திருக்கழுக்குன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்துவர். அதிலும் இவ்வாலய சங்கு தீர்த்தத்தில் 12 வருடத்துக்கு ஒருமுறை தோன்றிய வலம்புரி சங்குகளைக் குவியலாகச் சேமித்து வைத்துள்ளனர். அச்சங்குகளால் சுவாமிக்கு அபிஷேகம் செய்து லட்சதீப விழா நடத்துவர். காஞ்சியில் உள்ள கச்சபேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில், ஏற்றிய மாவிளக்கை தலையில் வைத்துக்கொண்டு ஆலய வலம் வந்து வழிபட்டு ஈசன் அருளை பெறுவர். விருட்ச வடிவம் கொண்ட விளக்குகளை ஏற்றி வைத்தால் ஒரு மரமே தீப ஒளியுடன் பிரகாசிப்பது போல இருக்கும். இவ்விளக்குகளை குருவாயூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆலயங்களில் காணலாம்.
திருமழிசை குளிர் நாயகி சமேத ஒத்தாண்டேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை சோம வாரத்தில் காலையில் 108 சங்காபிஷேகம் செய்வர். மாலையில் லட்ச தீப விழா நடத்துவர். பின் பஞ்சமூர்த்திகள் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். குமரி மாவட்டத்தில், கார்த்திகை தீபத்தன்று பெண்கள் வீட்டு முற்றத்தில் பூக்கள் நிரப்பிய தாம்பளத்தின் மத்தியில் குத்துவிளக்கேற்றி வைப்பர். அதனருகில் ஒரு பெரிய அகல் விளக்கின் எண்ணெய், திரிகளை நிரப்பி எரிய விடுவர். தினமும் வீட்டில் சுவாமி அறையில் ஏற்றும் தீபத்தில் பாக்கி உள்ள எண்ணெய், திரிகளை சேமித்து வைத்து அதனால் இதை எரிய விடுவர். இதனை பரணி தீபம் என்பர். இது குமரி மாவட்டப் பழக்கமாகும். வாஞ்சியத்தில் உள்ள முனிதீர்த்தம் என்ற குப்தகங்கையில் கங்காதேவி 999 பங்கு தன் சக்திகளுடன் ரகசியமாக வசிக்கிறாள். காசியில் ஒரு பங்கு சக்தியுடன் தான் வாசம் செய்கிறாள். எனவே காசியைவிட வாஞ்சியம் அதிக மகத்துவம் பெற்ற தலம். இங்கு கார்த்திகை ஞாயிறுகளில் நீராடி ஈசனை வழிபட்டால் பஞ்சமாபாதகம் விலகும். அன்று அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் ஈசனும், தேவியும் அஸ்திர தேவரோடு பிராகார வலம் வந்து குப்தகங்கை கிழக்குக் கரையில் ஆசி வழங்குவார்கள். இதை தரிசிப்பது புண்ணியம். குடந்தை நன்னிலம் சாலையில் ஒரு கி.மீ, தொலைவில் இத்தலம் உள்ளது.
திருப்பதியில் நடைபெறும் கார்த்திகை தீபம்
விஷ்ணு தலங்களில் மிகவும் புகழ் பெற்ற திருமலை திருப்பதியில் கார்த்திகை தீபத்தை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். திருக்கார்த்திகைத் தீபத்தன்று பெருமாள் வீதியுலா வருவார். அதன்பின் திருப்பு மண்டபம் என்ற இடத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். அடுத்து கோயிலுக்கு எதிரே ஆலய நுழைவாயில் அருகே நடைபெறும் சொக்கப்பனைக் கொளுத்தும் நிகழ்ச்சியைக் கண்டுகளிப்பார். பிறகு ஆலயம் செல்வார். அப்போது பக்தர்களுக்கு லட்டும், கார்த்திகைப் பொரியும் பிரசாதமாகத் தருவார்கள்.
கேரளாவில் கார்த்திகை
கேரள மாநிலம் பாலக்காடு நகரத்தின் ஒரு பகுதி கல்பாத்தி. காசியில் பாதி கல்பாத்தி என்பர். காரணம் காசியில் உள்ளது போல இங்கும் காசி விஸ்வநாதர் ஆலயமும், வற்றாத ஜீவநதியும் உள்ளது. காசி ஆலயத்தில் செய்யும் ஆறுகால பூஜையை இங்கேயும் செய்கின்றனர். நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகச் சிற்பிகளால் கவினுற செய்து கொடுக்கப்பட்ட தேர் இங்கு உள்ளது. இவ்வாலயத்தின் பெரிய விழா இந்த தேர்த்திருவிழாதான். ஐப்பசி மாதத்து கடைசி மூன்று நாட்கள் இந்தத் தேர்த் திருவிழா நடைபெறும். இந்நாட்களில் சுற்றியுள்ள 18 கிராமங்களையும் தேர் சுற்றிவந்து கார்த்திகை மாத முதல் நாள் நிலைக்கு வரும். இவ்விழாவில் தமிழக பக்தர்களும் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். பிரம்மன் சரஸ்வதியைப் பிரிந்திருந்த காலத்தில் காஞ்சியில் யாகம் ஒன்று நடத்தினார். தன்னை விட்டு விட்டு பிரமன் யாகம் நடத்துவதால் கோபம் கொண்ட சரஸ்வதி, யாகத்தை அழிக்க வேகவதி ஆறாகப் பெருக்கெடுத்து ஓடிவந்தார். திருமால் பெரிய ஒளிப் பிழம்பாக மாறி யாகத்தைத் தடுத்தார்.
பின் யாகத்திற்கு எந்த இடையூறும் ஏற்படாமலிருக்க சிவலிங்கம் நிறுவி வழிபட்டார். திருமாலுக்கு தீபப் பிரகாசர் என்றும், சிவனுக்கு விளக்கொளி நாதர் என்றும் பெயர். தீபேஸ்வர் என்றும் சிவனை அழைப்பர். இங்கு கார்த்திகை தீபத்தன்று ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுகின்றனர். இப்படித்தான் தீபப் பிரகாசர் தோன்றினார். அத்துடன் தீபேஸ்வரரையும் பிரதிஷ்டை செய்தார். காசியில் மணிகர்ணிகா துறை அருகே மணிகர்ணிகேஸ்வரர் ஆலயத்தில் தீபப் பிரகாச லிங்கம் உள்ளது. இதை ஜோதி தீபேஸ்வரர் என்பர். கார்த்திகை தீபத்தன்று தீபதானம் செய்து இச்சன்னதியில் தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லா வகையான சிறப்புகளையும் பெறலாம். தேவலோக மங்கையர்களான அப்சரப் பெண்கள் இங்கு வந்து தீபமேற்றி வழிபட்டு பெரும் பேறு பெற்றுள்ளனர்.

கார்த்திகை தீபம் ஏற்றும் முறைகள்


ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும். விளக்கினை ஏற்றி வைப்பதோடு இதோ இங்கே தரப்பட்டுள்ள துதியினையும் சொல்லுங்கள். தீப லட்சுமியின் அருளால் உங்கள் வாழ்வில் அஷ்டலட்சுமி கடாட்சம் சேரும்.
கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி  வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும். கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின், இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.
தீப லட்சுமி துதி
1. தீபோ ஜோதி பரம் ப்ரம்ஹ தீபோ ஜோதி ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம் ஸந்த்யா தீபோ நமோஸ்துதே
ஜோதி வடிவான தீபமே பிரம்மா, அதுவே விஷ்ணு, ஈசனும் அதுவே. காலை மாலை இருவேளையும் எவர் வீட்டில் விளக்கு ஏற்றப்படுகிறதோ அந்த வீட்டில் உள்ளவர்களின் பாவங்கள் நீங்குகின்றன. அப்படிப்பட்ட அருள் நிரம்பிய தீப லட்சுமியை வணங்குகிறேன்.
2. சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தனஸம்பத:
சத்ரு புத்தி வினாசாய தீபஜோதி நமோஸ்துதே
எல்லா சுபகாரியங்களும் தடையின்றி நடக்கவும், எதிரிபயம் விலகவும் உடல்நலம் சிறக்கவும், பொன் பொருள் சேரவும் அருள்புரியும் தீபலட்சுமியே... எங்கள் அறிவாற்றல் இருள் இன்றிப் பிரகாசிக்கவும் அருள்செய்யும் உன்னைத் துதிக்கிறேன்.
3. ஸுவர்ண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
ஸுதான்ய வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
கல்யாண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
விபூதி வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
எவரால் தினமும் தீபம் ஏற்றப்படுகிறதோ அவரது இல்லத்தில், பொன், பொருள் சேரும். தானியங்கள் குறைவிலாது பெருகும்; அன்னப் பஞ்சம் இருக்காது. எல்லா மங்கள காரியங்களும் தடை நீங்கிச் சிறப்பாக நடக்கும். சகல செல்வங்களும் சேரும். (விபூதி என்பதற்கு ஐஸ்வர்யம் என்ற அர்த்தமும் உண்டு). அவர் வீட்டில் திருமகள் நீங்காது இருப்பாள்.
4. கீடா: பதங்கா: மசகாச் ச வ்ருக்ஷõ:
ஜலே ஸ்தலே ஏ நிவஸந்து ஜீவா:
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜோ
பவந்தி நித்யம் ஸ்வசாஹி விப்ரா:
நுண்ணுயிர்கள், புழுக்கள், கொசுக்கள், வண்டுகள், பூச்சிகள், விலங்குகள், பறவைகள், மரம், செடி, கொடிகள் இவற்றோடு ஆகாயத்தில், பூமியில் நீரில் என எல்லா இடங்களிலும் உள்ள உயிர்கள் எவையானாலும் அவற்றின் எல்லா பாவங்களும் தீபஜோதியாகிய திருவிளக்கினை தரிசிப்பதால் நீங்கும். பல்வேறு பிறவிகளில் செய்த பாவங்களையும் நீக்கக்கூடிய ஜோதிலட்சுமியை வணங்குகிறேன். பிரகாசமான வாழ்வினை அவள் எனக்கு அளிக்கட்டும்.
திருவிளக்கே! திருவிளக்கே!
கார்த்திகை தீபத்தன்று வீட்டில் பெண்கள் பாட வேண்டிய பாடல் இது.
விளக்கே திருவிளக்கே: வேந்தன் உடன்பிறப்பே!
சோதி மணிவிளக்கே: சீதேவி பொன்மணியே!
அந்தி விளக்கே: அலங்கார நாயகியே!
காந்தி விளக்கே: காமாட்சித் தாயாரே!
பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டு
குளம்போல எண்ணெய் விட்டு
கோலமுடன் ஏற்றி வைத்தேன்.
ஏற்றினேன் நெய்விளக்கு: எந்தன் குடிவிளங்க
வைத்தேன் திருவிளக்கு: மாளிகையும் தான் விளங்க
மாளிகையில் சோதியுள்ள
மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்!
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா
சந்தான பாக்கியத்துடன் தனங்களும் தாரும் அம்மா
பெட்டி நிறையப் பூஷணங்கள் தாரும் அம்மா
பட்டி நிறையப் பால் பசுவைத் தாரும் அம்மா
கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும் அம்மா
புகழுடம்பைத் தாரும் அம்மா: பக்கத்தில் நில்லும் அம்மா
அல்லும் பகலும் எந்தன் அண்டையிலே நில்லும் அம்மா
சேவித்து எழுந்திருந்தேன்: தேவி வடிவம் கண்டேன்
வஜ்ரக் கிரீடம் கண்டேன்: வைடூரிய மாலை கண்டேன்
முத்துக் கொண்டை கண்டேன்: முழுப்பச்சைமாலை கண்டேன்
உரிமுடி கண்டேன்: தாழைமடல் சூடக் கண்டேன்
பின்னழகு கண்டேன்: பிறை போல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன்: தாயார் வடிவம் கண்டேன்
கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டும் கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
கைவளையல் கலகலவென கணையாழி மின்னக் கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகவென ஜொலிக்கக் கண்டேன்
காலில் சிலம்பு கண்டேன்: காலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிர
கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்!
அன்னையே அருந்துணையே
 அருகிருந்து காரும் அம்மா
வந்த வினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா
தாயாரும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே! உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்:
திருவிளக்கு பூஜை விதிமுறை
* விளக்குகளை நன்றாக கழுவி, சுத்தமான தாம்பளம் அல்லது பலகையில் வைக்கவேண்டும். உடைந்த, கீறல் விளக்குகளை பயன்படுத்தக் கூடாது.
* ஏற்றியபின்பு அசையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
* விளக்கிற்கு மாலை மற்றும் மாங்கல்ய கயிறை சூட்ட வேண்டும்.
* சுடரில் இருந்து பத்தி, சூடம் கொளுத்தக் கூடாது. தீப்பெட்டியே பயன்படுத்த வேண்டும்.
* எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ளவேண்டும். திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும்.
* வீடுகளில் பூஜை செய்யும்போது, விளக்கை கிழக்கு நோக்கி வைத்து அதற்கு வலப்புறத்தில் வடக்கு முகமாக அமர்ந்து கொள்ள வேண்டும்.
* விளக்கை தீக்குச்சியால் நேரடியாக ஏற்றாமல், துணைவிளக்கை ஏற்றி, அதன் மூலமே ஏற்ற வேண்டும்.
* பூஜை முடியும்வரை ஸ்லோகங்களை ஒரே மாதிரியான குரலில் சொல்ல வேண்டும். ஒருவர் உயர்த்தியும், ஒருவர் தாழ்த்தியும் குரல் கொடுக்கக்கூடாது.
விளக்கு பூஜை மாத பலன்
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, அமாவாசை மற்றும் மாதப்பிறப்பு நாட்களில் விளக்குபூஜை செய்வது மிகுந்த நற்பலன் தரும்.
சித்திரை - தானிய வளம் .
வைகாசி - செல்வச்செழிப்பு.
ஆனி - திருமண பாக்கியம்.
ஆடி - ஆயுள்பலம்.
ஆவணி - கல்வித்தடை நீக்கம், அறிவார்ந்த செயல்
புரட்டாசி - கால்நடைகள் அபிவிருத்தி
ஐப்பசி - நோய் நீங்குதல்
கார்த்திகை - புத்திரபாக்கியம், சகல வளம்.
மார்கழி - ஆரோக்கியம் அதிகரிப்பு.
தை - எடுத்த செயல்களில் வெற்றி.
மாசி - துன்பம் நீங்குதல்.
பங்குனி - ஆன்மிக நாட்டம், தர்மசிந்தனை வளர்தல்.
கார்த்திகை பெண்களை போற்றும் நன்னாள்
நன்றி மறப்பது நன்றன்று என்பார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். தமிழ்த்தெய்வமான முருகப்பெருமானும் நன்றி மறவாமல் தன்னை வளர்த்த கார்த்திகைப் பெண்களைப் போற்றும் நாள் திருக்கார்த்திகைத் திருநாள். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் கிளம்பின. அப்பொறிகளை கங்கை தாங்கிக் கொண்டாள். ஆறு தாமரைகளில் ஆறு குழந்தைகளாக முருகப்பெருமான் அவதரித்தார். மகாவிஷ்ணு அப்பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும்படி கார்த்திகைப்பெண்கள் ஆறுபேருக்கு கட்டளையிட்டார். அவர்கள் ஆறுபிள்ளைகளுக்கும் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இதனால் அவர்கள் ஒரே நட்சத்திரமாக மாற்றப்பட்டு வானமண்டலத்தில் இடம் பிடித்தனர். இந்த நட்சத்திர நாளில் தன்னை வழிபட்டால் எல்லா வரங்களும் தந்தருள்வதாக குழந்தை முருகன் வரம் அளித்தார். முருகனுக்குரிய ஜென்ம நட்சத்திரம் விசாகம். ஆனால், அந்த நட்சத்திரத்தில் மாதவிரதம் மேற்கொள்ளும் வழக்கமில்லை. கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகனுக்கு அபிஷேக ஆராதனைகளும், விரதமும் மேற்கொள்வதில் இருந்து நன்றி மறவாத நாயகன் முருகன் என்பதை உணர முடிகிறது.
சிவசக்தி தீபம்
தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம். திருக்கார்த்திகை தினத்தன்று, கிளியஞ்சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.
திருவிளக்கில் தேவியர்
திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாவண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.
எந்த நேரத்தில் விளக்கேற்றலாம்?
 சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். ஒரு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும், கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும். இது அனைவருக்கும் பொதுவான நேரம். விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.
பழமையான விளக்கு திருவிழா
திருவிளக்கு வழிபாடு இன்று நேற்று தோன்றியதல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மக்கள் இறைவனை ஜோதியாக வணங்கிப் போற்றியுள்ளனர். சங்ககால இலக்கியங்கள் இந்த வழிபாட்டை கார்த்திகை விளக்கீடு என்று குறிப்பிடுகின்றன. பெண்கள் விளக்கு வழிபாடு செய்த நிகழ்வு அகநானூறு, நற்றிணை போன்ற எட்டுத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கிய ஆய்வாளர்கள் சிலர், கார்த்திகை மாதத்தையே முதல் மாதமாகக் கொண்டு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டதாக கருதுகின்றனர். கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தன்று வீடு முழுக்க விளக்கேற்றுவதைப் பற்றி சம்பந்தர் பாடியிருக்கிறார். மயிலாப்பூரில் தனக்கு நிச்சயம் செய்த பூம்பாவை என்ற பெண் திடீரென மரணமடையவே, அவர் விளக்கீடு காணாதே போதியே பூம்பாவாய் என்று பாடுவதில் இருந்து இந்த விழாவின் மேன்மையை அறியலாம்.
பொட்டு வைக்கும் முறை
வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன் சந்தனம் குங்குமம் இடவேண்டும் என்பது நியதி. விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும். அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை. எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது, ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்து இடவேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியாவும் ஒரு காரணமும் சொல்வர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.
மனநிம்மதி தரும் விளக்கு
வீடுகளில் நாம் குத்துவிளக்கு, அகல்விளக்கு, காமாட்சி விளக்கு, கிலியஞ்சட்டி (மண்ணால் ஆனது) என்றெல்லாம் ஏற்றுகிறோம். இவை எல்லாவற்றிலும் விட உயர்ந்தது சரவிளக்கு. வெள்ளி நெய் தீபம் ஏற்றினால் வருமானம் அதிகரிக்கும், கடன் தீரும். ஐந்துமுக குத்து விளக்கேற்றினால் திருமணத்தடை நீங்கும், குடும்ப ஒற்றுமை நிலைக்கும். செடி விளக்கு ஏற்றினால் குடும்பம் முழுமைக்கும் நோய் நீங்கும். உங்கள் குழந்தைகளும், பேரன் பேத்திகளும் சிறப்பாகப் படித்து நல்லநிலைக்கு முன்னேறுவர். ஆக, இவையெல்லாம் குறிப்பிட்ட சில பலனையே தருகின்றன. என்ன தான் பொருளும், பணமும் இருந்தாலும் மனநிம்மதி தான் முக்கியம். நிம்மதியின்மைக்கு காரணம் ஜென்ம ஜென்மமாக நாம் செய்த பாவங்களின் தாக்கமே. ஜென்மாந்திர பாவங்கள் அடியோடு அழிய தொங்கும் சரவிளக்கு ஏற்ற வேண்டும். கோயில்களிலுள்ள சரவிளக்குகளுக்கு எண்ணெய், நெய் வாங்கிக் கொடுக்க வேண்டும்.
எந்த எண்ணெய்க்கு என்ன பலன்?
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.
நெய்- செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
நல்லெண்ணெய்- ஆரோக்கியம் அதிகரிக்கும்
தேங்காய் எண்ணெய்- வசீகரம் கூடும்
இலுப்பை எண்ணெய்- சகல காரிய வெற்றி
விளக்கெண்ணெய்- புகழ் தரும்
ஐந்து கூட்டு எண்ணெய்- அம்மன் அருள்
ஐந்துக்கும் ஒவ்வொரு பலன்
விளக்கேற்றும் போது ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு பலன் உண்டு.
ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும் உண்டாகும்
எந்த திசை என்ன பலன்
கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி
மேற்கு - கடன், தோஷம் நீங்கும்
வடக்கு - திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.
விளக்கு துலக்க நல்ல நாள்
குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துலக்குவது நல்லது. இதற்கு காரணம் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி (குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின் துணைவி) குடியிருக்கிறாள். செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம். வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநிதி யட்சணி (குபேரனின் பிரதிநிதியான சங்கநிதியின் துணைவி) குடியேறுகிறாள். எனவே வெள்ளிக்கிழமை துலக்குவதைத் தவிர்த்து, வியாழன் முன்னிரவில் துலக்குவது நல்லது.
விளக்கு துலக்கும் நாள்பலன்
* ஞாயிறு- கண் நோய் குணம், பார்வை பிரகாசம்.
* திங்கள்- மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளர்தல்.
* வியாழன்- குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி.
* சனி- வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு, இழந்த பொருள் கிடைத்தல்.
இவர்களுக்குரிய எண்ணெய்
விநாயகர்- தேங்காய் எண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
பைரவர் - நல்லெண்ணெய்
அம்மன் - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த ஐந்து கூட்டு எண்ணெய்
பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள்- நல்லெண்ணெய்
நிலைத்த பலனுக்கு விளக்கு வழிபாடு
கிராமங்களில், திருவிளக்கை தாய் என்றும், நாச்சியார் என்றும் அழைப்பது வழக்கம். இதை விநாயகரின் வடிவம் என்றும் சொல்வதுண்டு. திருவிளக்கு வழிபாடு செய்யும் போது, விநாயகருக்குரிய மந்திரங்கள் அல்லது பாடல்களைப் பாடி, பொட்டுவைத்து, மாலை அணிவித்து, தூபதீபம் காட்டினால் நிலைத்த பலன் கிடைக்கும்.
தீப ஜோதியே நமோ நம!
இறையருள் கைகூட தண்ணீரால் விளக்கெரித்த நமிநந்தியடிகள், தன் உதிரத்தையே எண்ணெயாய் ஊற்றி தீபமேற்ற முயன்ற கலியநாயனார், தலைமுடியை விளக்குத் திரியாக்கிய கணம்புல்லர், அறியாமல் தீபத்தைத் தூண்டிவிட்ட காரணத்துக்காகவே, மறு பிறவியில் சக்ரவர்த்தியாய் பிறந்த மகாபலி ஆகியோரின் புண்ணிய கதைகள் தீப வழிபாட்டின் மகத்துவத்தை உணர்த்தும். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை ஓர் உருவில் அடக்காமல், ஒளி வடிவில் வழிபட்டுப் பலன் பெற தீபங்கள் உதவும். பரஞ்ஜோதியாய் திகழும் பரம்பொருளுடன் ஜீவ ஜோதியாகிய ஆன்மாக்கள் இரண்டறக் கலக்க வேண்டும். இதுவே, தீபங்கள் உணர்த்தும் வழிபாட்டுத் தத்துவம்.
ஆலயங்களில் இறைவனுக்குப் பதினாறு வகை உபசாரங்கள் செய்வார்கள். அவற்றுள் தூப - தீபம் சமர்ப்பித்தலும் ஒன்று. தீப சமர்ப்பணத்தில் 16 வகை தீபங்கள் இடம்பெறும். ஒவ்வொரு தீபத்துக்கும் ஒவ்வொரு தேவர்கள் உரிமையானவர்கள். புஷ்ப தீபம்- பிரம்மன்; புருஷாமிருகம் - கலைமகள்; நாகதீபம்-நாகராஜர்; கஜ தீபம் - விநாயகர்; வியாக்ர தீபம்-பராசக்தி; ஹம்ச தீபம் - பிரம்மா; வாஜ்ய தீபம்- சூரியன்; சிம்ம தீபம்-துர்கை; சூல தீபம்-மும்மூர்த்திகள்; துவஜ தீபம்-வாயு; வ்ருஷப தீபம்-ரிஷபதேவர்; பிரமா தீபம்-துர்காதேவி; குக்குட தீபம்-கந்தப்பெருமான்; கூர்ம தீபம்-மகாவிஷ்ணு; ஸ்ருக் தீபம்-அக்னி; சக்தி தீபம்-பராசக்தி.
ஒவ்வொரு தீபத்தை ஏற்றி இறைவனுக்குக் காட்டும்போது, அதற்குரிய தேவர்கள் சூட்சுமமாகத் தோன்றி இறைவனை வழிபடுவதுடன், நமக்கும் அருள்புரிவார்கள். திருக்கோயில்களில் நடைபெறும் இந்த தீப உபசாரத்தைத் தரிசிக்க, 16 பேறுகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கார்த்திகை விரதத்தின் சிறப்பு!


பன்னிரண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதமிருந்துதான் நாரதர், சப்த ரிஷிகளுக்கு மேலான பதவியை அடைந்தார். மகாபலிச் சக்கரவர்த்தி, திருக்கார்த்திகை விரதமிருந்தே தனது உடலின் வெப்பத்தைத் தணித்துக் கொண்டான். திரிசங்குவும், பகீரதனும் கார்த்திகை விரதமிருந்தே பேரரசர் ஆனார்கள். மகிஷனை வதம் செய்ததால் ஏற்பட்ட பாவம் நீங்க, பார்வதியாள் திருக்கார்த்திகை விரதம் இருந்ததாகச் சொல்கிறது புராணம்.
முருகனுக்கு உகந்த கார்த்திகை விரதம்
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் நட்சத்திர அடிப்படையில் அனுஷ்டிக்கப்படுகிறது. மாதக் கார்த்திகைகளே சிறப்புடையது என்றால், கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படும் திருக்கார்த்திகை குமரனுக்கு மிக மிக முக்கியமானது. இதற்கு அடுத்த நிலையை ஆடிக்கிருத்திகை பெறும். இவ்விரதத்தை மேற்கொள்வோர் மேலான பதவிகளை அடைவர். நாரத மகரிஷி 12ஆண்டுகள் இந்த விரதமிருந்து, எல்லா முனிவர்களிலும் மேலாக எல்லா உலகமும் சுற்றி வரும் வரம் பெற்றார். இவ்விரதநாளில் முருகனுக்குரிய பாராயண நூல்களான கந்தசஷ்டிக்கவசம், சண்முககவசம் படிக்க வேண்டும். கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணம் கேட்பதும் நல்லது.
சிவபெருமான் தன் ஐந்து முகங்களோடு ஆறாவது முகமான அதோமுகத்தையும் சேர்த்து ஆறு கண்களில் இருந்து நெருப்புப்பொறியை தோற்றுவித்தார்.
அப்பொறிகளை வாயுவும், அக்னியும் கங்கையில் சேர்த்தனர். ஆறுகுழந்தைகள் உருவாயின. அவர்களை வளர்க்கும் பொறுப்பை, கார்த்திகைப் பெண்கள் ஆறுபேரிடம் ஒப்படைத்தார். அவர்கள் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். பிள்ளைகள் ஆறுபேரையும் காணவந்த பார்வதி ஆறுமுகத்தையும் ஒருமுகமாக்கினாள். அப்பிள்ளைக்கு கந்தன் என்ற திருநாமம் உண்டானது. கந்தன் என்றால் ஒன்று சேர்ந்தவன் எனப்பொருள். சிவபெருமான் முருகனை வளர்த்து ஆளாக்கிய கார்த்திகைப் பெண்களிடம், நம் பிள்ளையை நல்லமுறையில் வளர்த்து ஆளாக்கிய நீங்கள் அனைவரும் நட்சத்திர மண்டலத்தில் என்றென்றும் நிலைத்து வாழ்வீர்கள். உங்களை நினைவுபடுத்தும் வகையில் முருகனுக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் வழங்கும். கார்த்திகை நாளில் முருகனுக்கு விரதமிருந்து வழிபடுவோர் எல்லா சவுபாக்கியங்களையும் பெறுவார்கள் என்று அருள்புரிந்தார். காளிதாசர் இயற்றிய குமாரசம்பவத்தில் இந்த வரலாறு விரிவாக விளக்கப்பட்டுள்ளது. பார்வதி இமவான் மகளாகப் பிறந்தது முதல் குமாரக்கடவுளான முருகனின் பிறப்பு வரை எட்டு சருக்கங்கள் இதில் அமைந்துள்ளன. குமார சம்பவத்தில் முருகப்பெருமான் தாரகாசுரனை வதம் செய்ததாக கூறப்பட்டுள்ளது. தமிழ் புராணங்களில், பத்மாசுரனை ஆட்கொண்ட தகவல் உள்ளது.
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. குறிஞ்சிக்கடவுளாகக் குமரன் முருகனே மலைகளின் மீது ஆட்சி செய்கிறார். தெய்வங்களின் உயர்ந்தவராகத் திகழ்வதால் அவரைத் தெய்வசிகாமணி என்று போற்றுவர். கந்தனைக் கரம் குவித்து வணங்குவோருக்கு கலியின் கொடுமையும், காலபயமும் கிடையாது என்று வடமொழி ஸ்காந்தம் குறிப்பிடுகிறது. நாம் அறியாமல் செய்த பிழைகளை முருகன் பொறுத்துக் கொள்வார். பிள்ளை போல பிரியம் காட்டுவார், என்று கந்தசஷ்டிகவசம் கூறுகிறது. என்னைப் பெற்றவன் நீயே! என் பிழைகளைப் பொறுத்துக் கொள்வது உன் கடமை! என்று, கந்தசஷ்டி கவசம் எழுதிய தேவராய சுவாமிகள் முருகனிடம் வேண்டுகிறார்.  நாமும் கார்த்திகை நன்னாளில் முருகப்பெருமானை வணங்கி நற்பலன்கள் பெறுவோம்.
ஓராண்டு விரதம் இருங்க!
இக்காலத்தில் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் கணவர், பிள்ளைகள் பெருத்து விட்டார்கள். இவர்கள் திருந்தி நல்வாழ்வு வாழ, பெண்கள் கார்த்திகை விரதம் மேற்கொள்ளலாம். விளக்கு ஒளி இல்லாவிட்டால் வீடு இருண்டுவிடும். அதுபோல, மனவீட்டில் ஒளி இல்லாவிட்டால் உலகத்தில் அநியாயங்களே மிகுதியாக நடக்கும். கெட்ட வழக்கங்களால் மனதை இருளாக்கிக் கொண்டிருக்கும் நம் சொந்தங்கள் திருந்த, திருக்கார்த்திகை தீபம் போல் ஞான ஒளியை ஏற்றுமாறு முருகப்பெருமானிடம் வேண்டிக் கொள்வது உசிதம். திருக்கார்த்திகை தொடங்கி, ஓராண்டுக்கு மாதம்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் விரதம் மேற்கொண்டு பலனடையுங்கள்.
கார்த்திகை பெண்களின் பிள்ளை
பரமசிவனின் நேத்ராக்னியில் இருந்து வந்தவரே குமாரசுவாமி. அவர் ஞானாக்னியானாலும் இதயத்தில் குளிர்ந்தவர். ஏனென்றால் ரொம்ப ஜலசம்பந்தம் உள்ளவர். சரவணம் என்ற பொய்கையில் தான், சிவதேஜஸ் முருகனாக ரூபம் கொண்டது. அம்பாளே சரவணப் பொய்கை. அப்பா நெருப்பாக இருக்க, அம்மா நீராக இருந்தாள். ஜலரூபமான கங்கையும் அவருக்கு இன்னொரு மாதா. அதனால் முருகனை காங்கேயன் என்று அழைத்து வழிபடுகிறோம். எல்லாப் பெண்களும் அவருக்கு மாதா. சஷ்டிப் பெண்களுக்கு அவர் பாலன் ஆனார். கார்த்திகைப் பெண்டிருக்குப் பிள்ளையாகக் கார்த்திகேயர் ஆனார். நட்சத்திரத்தில் ஆறாக இருப்பது கார்த்திகை. திதியில் ஆறாவது சஷ்டி. இவருக்கு ஆறுமுகம். ஆறு அட்சரம் கொண்ட சடாக்ஷரி (சரவணபவ) இவருடைய மந்திரம். மனிதர்களிடமுள்ள காமம் (பெண்ணாசை), குரோதம் (கோபம்), லோபம் ( பற்று), மோகம் (பிற ஆசை), மதம் (ஆணவம்), மாச்சர்யம் (வெறுப்பு) என்ற ஆறு பகைவர்களைக் கொன்று ஞானம் அருளும் ஆறுபடை வீரர் அவரே. ஜொலிக்கிற ஞானாக்னியான வேலாயுதத்தை சக்தி சக்தி என்றே சொல்லுகிறோம். வேதமே முக்கியமாக அக்கினி வழிபாட்டு மதம் தான். அக்கினி என்ற வார்த்தையோடு தான் வேதம் ஆரம்பமாகிறது. உபா சனையில் (இறைவனை வழிபடும் முறை) ஒளபாசனம் என்னும் அக்கினி முறையே முக்கியமானது. இதற்கு சுப்பிரமணியரே அதிதேவதையாக இருக்கிறார்.
-காஞ்சிப் பெரியவர்
கார்த்திகை விளக்கின் தத்துவம்
எண்ணெய் கரைகிறது, திரி கரிகிறது. ஆம்...தீபம் என்பது தன்னை கரைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு ஒளி வழங்குகிறது. பிறர்நலம் பேணுவதற்காக தன்
உயிரையே தியாகம் செய்ய வேண்டும் என்பது கார்த்திகை விளக்கின் தத்துவம். அது மட்டுமல்ல! தீபத்தின் ஒளி மனிதர்களுக்கு மட்டுமல்ல, பிற உயிரினங்களின் மீதும், உயிரற்ற பொருட்கள் மீதும் படுகிறது. புழு, கொசு, நிலம், நீர்வாழ் பிராணிகள் மீதெல்லாம் படுகிறது. தீபஒளி எப்படி எல்லார் மீதும் பரவுகிறதோ, அதுபோல் மனிதனின் மனதில் எழும் அன்பு ஒளி எல்லார் மீதும் பட வேண்டும் என்பதையே கார்த்திகை தீபம் நமக்கு உணர்த்துகிறது.
திருக்கார்த்திகை
கார்த்திகை விளக்கு திருவிழா தமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் ஒன்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீப வழிபாட்டிற்கு அகல் விளக்குகளே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த மாதம் முழுவதும் மாலை நேரத்தில் வீடுகளின் வாசலில் விளக்கேற்றி வழிபடுகின்றனர். கார்த்திகை தீபத்தின் முதல்நாள் ஏற்றப்படும் தீபம் பரணி தீபமாகும். இது முருகனுக்குரிய வழிபாடு. மறுநாள் திருக்கார்த்திகை தீபம் சிவனுக்காக ஏற்றப்படுகிறது. கார்த்திகை மாத வளர்பிறை கிருத்திகை நட்சத்திரத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. அன்று விரதம் இருந்து மாவிளக்கு ஏற்றி வழிபடுவதே முறையான வழிபாடாகும். மாலை மாவிளக்கு ஏற்றி அந்த விளக்கிற்கு பூஜை செய்து அதன்பிறகே உணவு உண்ண வேண்டும். கார்த்திகை அன்று பகலில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். கார்த்திகை அன்று மாலையில் வீட்டிலிருக்கும் எல்லா திருவிளக்குகளையும் ஏற்ற வேண்டும். வாசலில் சிறு விளக்குகளை ஏற்றிவைக்க வேண்டும். இந்த தீபச்சுடர்கள் எங்கும் பிரகாசிப்பதைக் காணும்போது மகிழ்ச்சி பெருகுவதுடன் பக்தியும் சுரக்கும்.
திருக்கார்த்திகையில் தீபமேற்றுவது ஏன்?
கிருதயுகத்தில் ஒரு கார்த்திகை மாத பௌர்ணமி நாளில், முக்கண்ணன், தன் முறுவலாலேயே முப்புரங்களையும் எரித்து திரிபுரதகனம் நடத்தினார். திரிபுரதகனத்தின் போது,  சிவனின் சிரிப்பொலி உலகெங்கும் பரவி, ஜோதியாகப் பிரகாசித்து உலகையே ஒளிவெள்ளத்தில் ஆழ்த்தியது. தீய சக்திகளுக்கு அக்னி பிழம்பாகவும், உலகிற்கு வெளிச்சமாகவும் விளங்கிய சிவனின்  அந்த பிரகாசத்தினை வழிபடும் விதத்தில் தான் கார்த்திகை தீப உற்சவம் கொண்டாடப்படுகின்றது என்கிறது
கார்த்திகை திருவிளக்கு பூஜை
கார்த்திகையன்று வீட்டிலோ அல்லது கோயில்களிலோ திருவிளக்கு பூஜை நடத்தினால், லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். எல்லா இடங்களிலும் இருக்கும் இறைவனை நம் இல்லத்திலோ, ஊரிலோ எழுந்தருளச் செய்வதே விளக்கு வழிபாடு. ஆதியில் வேதரிஷிகள் ஹோமம் செய்து இறைவனை வழிபட்டனர். அப்போது, யாககுண்டங்களில் அக்னி எரியும். இதுவே எளிமையாக்கப்பட்டு தீப வழிபாடாக மாறியது. விளக்கு வழிபாடு சுற்றுப்புற இருளை அகற்றுவதோடு, மனதின் இருளையும் அகற்றுகிறது. பூஜையறையில் வெள்ளிக்கிழமைகளில் வாசலில் மாக்கோலம் இட்டு, அதன் மத்தியில் விளக்கை ஏற்றிவைத்து, அதனை வீட்டு பூஜையறைக்குள் கொண்டு வந்து வைத்தால் விளக்குடன் மகாலட்சுமியும் இல்லத்திற்குள் வருவாள் என்பது ஐதீகம்.
ஆறுதீபம் ஏற்றுங்க!
திருக்கார்த்திகை திருநாளில் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மலை தீபம் சிவாம்சமாகும். யாராலும் அணுக முடியாத ஞான மலை அண்ணாமலை. தேவர்களாலும் அறிந்து கொள்ளமுடியாத பரம்பொருள் இறைவன். ஆனால், நம் மீது கொண்ட கருணையினால் தன்னை எளிமைப்படுத்திக் கொண்டு அருள்புரியும் நாளே திருக்கார்த்திகை. சூரபத்மனின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டபோது, ஈசனே முருகனாக அவதரித்து அருள்புரிந்தார். அவரது நெற்றிக்கண்ணிலிருந்து தீப்பொறிகள் கிளம்பின. ஆறுதீப்பொறிகளும் சரவணப்பொய்கையில் சிறுகுழந்தைகளாக உருவெடுத்தன. அதுபோல,பெருஞ்சுடரான அண்ணாமலை தீபமே நம் வீட்டு சிறுஅகல்களில் குட்டிக்குழந்தையாக முருகனாக ஒளிவீசுகிறது. வீடுகளில், கார்த்திகை தீபம் ஏற்றும்போது குறைந்த பட்சம் ஆறுதீபங்களை வாசலில் வைக்க வேண்டும். அண்ணாமலை தீபம் வேறு, நம் வீட்டு அகல்தீபம் வேறு என நினைக்க வேண்டாம். இரண்டும் ஒன்றே.
முற்பிறவி பாவம் நீக்கும் தீபம்
தீபத்தைப் பெருமைப்படுத்தும் விதத்தில் தீபமங்களஜோதீ நமோநம என்று திருப்புகழில் அருணகிரியார் பாடுகிறார். முருகப்பெருமானை அனர் தீபமாக வர்ணிக்கிறார். வேதாரண்யம் கோயிலில் எலி ஒன்று, விளக்கில் கிடந்த நெய்யைக் குடிப்பதற்காக வந்தபோது, தவறுதலாக அதன் மூக்கு பட்டு அணைய இருந்த தீபம் தூண்டப்பெற்றது. அதன் பயனாக அந்த எலி மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்தது. கோயிலில் ஏற்றப்படும் தீபத்திற்கு செவ்வவிருத்தி தரும் அளவுக்கு மகத்துவம் உண்டு. நாம் முற்பிறவியில் அறியாமல் செய்த பாவங்கள் கூட கோயில் தீபம் ஏற்றுவதாலும், தீபத்தை தரிசிப்பதாலும் விலகிவிடும். அதனால், திருக்கார்த்திகையன்று கோயில்களில் தீபஸ்தம்பம், அணையாதீபம், லட்சதீபம், கோடி தீபம் என்று பலவிதங்களிலும் விளக்கேற்றிவைப்பர். கோயில் முன்னர் சொக்கப்பனை கொளுத்துவர்.
எல்லாருக்கும் பாவ விமோசனம்
கார்த்திகை தீபத்தின் நோக்கம் பாவம் போக்குதல் என்பது தான். அகல் விளக்கில் தீபம் ஏற்றும் போது, அதன் பிரகாசம் குறிப்பிட்ட தூரத்துக்கு தான் தெரியும். அதையே மலை உச்சியிலோ, தரையில் சொக்கப்பனையாகவோ ஏற்றினால் அதன் பிரகாசம் நீண்ட தூரம் தெரியும். மலையில் ஏற்றும் தீபம், ஏற்றும் ஊரில் மட்டுமின்றி பக்கத்திலுள்ள பல ஊர்களுக்கும் கூட தெரியும். அத்தனை ஊர்களிலும் இருக்கும் சிறு சிறு ஜந்துக்களின் உடலில் கூட அதன் பிரகாசம் படும். மனிதர் மட்டுமின்றி, சிறு ஜீவன்களும் செய்த பாவம் தீரும். இந்த நல்ல நோக்கத்தில் தான் சொக்கப்பனை, அண்ணாமலை, பழநி, திருப்பரங்குன்றம் இன்னும் பல ஸ்தலங்களில் மலை தீபமாகவும், மற்ற தலங்களில் சொக்கப்பனையும் கொளுத்துகின்றனர்.
கார்த்திகை பொரி
திருக்கார்த்திகைத் திருநாளில் இறைவனுக்கு கார்த்திகைப் பொரி சமர்ப்பித்து வழிபடுவது விசேஷம். வெண்ணீறு பூசிய சிவபெருமானைக் குறிக்கும் வெண்மையான நெற்பொரி, வள்ளல் தன்மை கொண்ட மாவலியைக் குறிக்கும் தேங்காய்த் துருவல், தூய்மையின் அடையாளமாக வெல்லம் ஆகிய மூன்றும் சேர்ந்ததே கார்த்திகைப்பொரி. இதை தூய பக்தியுடன் இறைவனுக்குச் சமர்ப்பித்து வழிபட, நம் வாழ்வு ஒளிமயமாகும்!

திருக்கார்த்திகை தீபம் ஏற்றும் திருவண்ணாமலை


கார்த்திகை தீபத்தின் நோக்கம் பாவம் போக்குதல் என்பது தான். அகல் விளக்கில் தீபம் ஏற்றும் போது, அதன் பிரகாசம் குறிப்பிட்ட தூரத்துக்கு தான் தெரியும். அதையே மலை உச்சியிலோ, தரையில் சொக்கப்பனையாகவோ ஏற்றினால் அதன் பிரகாசம் நீண்ட தூரம் தெரியும். மலையில் ஏற்றும் தீபம், ஏற்றும் ஊரில் மட்டுமின்றி பக்கத்திலுள்ள பல ஊர்களுக்கும் கூட தெரியும். அத்தனை ஊர்களிலும் இருக்கும் சிறு சிறு ஜந்துக்களின் உடலில் கூட அதன் பிரகாசம் படும். மனிதர் மட்டுமின்றி, சிறு ஜீவன்களும் செய்த பாவம் தீரும். இந்த நல்ல நோக்கத்தில் தான் சொக்கப்பனை, அண்ணாமலை, பழநி, திருப்பரங்குன்றம் இன்னும்பல ஸ்தலங்களில் மலை தீபமாகவும், மற்ற தலங்களில் சொக்கப்பனையும் கொளுத்துகின்றனர்.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் முறை
திருக்கார்த்திகையன்று காலையில் ஏற்றப்படுவது பரணிதீபம். இத்தீபத்தை அண்ணாமலையார் கருவறையில் ஏற்றுவர். பரம்பொருள் ஒன்று என்பதை காட்டுவதற்காக ஒரு பெரிய கற்பூரக் குவியலில் ஜோதி ஏற்றி தீபாராதனை செய்வர். அதிலிருந்து ஒரு மடக்கில் உள்ள நெய்த்திரியில் விளக்கு ஏற்றப்படும். அந்த தீபத்தை நந்திதேவரின் முன் காட்டி ஐந்து மடக்குகளில் நெய் விளக்கேற்றுவர். விநாயகர், முருகன், சிவன், அம்பிகை, சண்டிகேஸ்வரர் என்னும் பஞ்சமூர்த்திகளையும் இந்த ஐந்து தீபங்கள் குறிக்கும். முதலில் ஏற்றப்பட்ட நெய்தீபத்தை உண்ணாமுலை அம்மன் சந்நிதிக்கு கொண்டு செல்வர். அங்கே ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றுவர். இது தேவியின் பஞ்சசக்திகளைக் குறிக்கும். அதன்பின் எல்லா சந்நிதிகளிலும் தீபம் ஏற்றப்படும். பரணி நட்சத்திர வேளையில் ஏற்றுவதால் இதை பரணிதீபம் என்பர். இந்த தீபங்கள் அனைத்தும் மாலையில் ஒன்று சேர்க்கப்படும். உலகம் எல்லாம் பரம்பொருளின் மாறுபட்ட கோலங்களே. அவை அனைத்தும் மீண்டும் பரம்பொருளில் ஐக்கியமாகிவிடும் என்பதை உணர்த்தும் விதத்தில் இதைச் செய்வர். மாலையில் பின்னர் பஞ்சமூர்த்திகளும், அர்த்தநாரீஸ்வரரும் கோயிலுக்குள் எழுந்தருள்வர். இவர்களுக்கு தீபாரதனை செய்யும் போது மலையில் தீபம் ஏற்றப்படும்.
அண்ணாமலை தீபம்: கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் அண்ணாமலையார் தீபம் ஏற்றப்படுகிறது. மிகப்பெரிய கொப்பரையில் 24 முழ துணியை திரியாக வைத்து கற்பூர தூள் சேர்த்து சுருட்டப்படும். கொப்பரையில் 3500 கிலோ  நெய் வார்த்து இந்த சுடர் எரிக்கப்படுகிறது. இந்த பெருஞ்சுடர் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு எரியும். 60 கி.மீட்டர் தூரம் வரை இந்த சுடர் ஒளி தெளிவாகத் தெரிகின்றது.  தீபம் குளிர்ந்த பின்னர், மலையுச்சியில் இருந்து திருக்கோயிலுக்கு தீப கொப்பரை எடுத்துவரப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்படும். பின்னர் அதனை அப்படியே பாதுகாத்து, மார்கழி- ஆருத்ரா தரிசன திருநாளில், கொப்பரையில் இருந்து தீப மை சேகரித்து, அதனுடன் இதர வாசனைத் திரவியங்கள் சேர்த்து, நடராஜருக்கு சார்த்தி வழிபாடுகள் நடைபெறும். பிரசாத மை பக்தர்களுக்கும் வழங்கப்படும். அதை, தினமும் அண்ணாமலையாரை தியானித்து நெற்றியில் இட்டு வர, துயரங்கள் நீங்கி நன்மைகள் பெருகும்; நம் இல்லத்தை தீய சக்திகள் அண்டாது என்பது நம்பிக்கை.
அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம் ஆகும். பெரும் தீபங்கள் ஏற்றுவதால் புயல் தோன்றுவது தடுக்கப்படும் என்றும் தோன்றிய புயலின் வேகம் தணிக்கப்படும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவியர்களும் ஒருங்கே பிரசன்னமாகி அருள் பாலிக்கின்றனர். சுடர் லட்சுமியாகவும், ஒளி சரஸ்வதியாகவும், வெப்பம் பார்வதியாகவும் கருதப்படுகிறது. ஆன்மாவுக்கும் ஆண்டவனுக்கும் இடையிலுள்ள உறவை திருவிளக்குகள் உணர்த்துகின்றன. விளக்கில் சுடர் எரிவது நமக்கு நன்றாக தெரியும் புறத்தோற்றமாகும். ஆனால் அந்தச்சுடர் எண்ணெயை மெல்ல கிரகித்து எரிகின்றது என்பது நாம் உணர வேண்டிய அகத்தோற்றமாகும்.  வாழ்க்கையில் தெளிவான புறத்தோற்றத்தையும் அதற்கு அடிப்படையான, நுட்பமான அகத்தோற்றத்தையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதை தீப வழிபாடு நமக்கு எடுத்துக் காட்டுகிறது. திருவிளக்கால் அறியத்தக்க மறைபொருள்கள் பல இருக்கின்றன என்பதை தெரிந்து செயல்பட்டால் வாழ்வில் இருள் நீங்கி, ஒளி பெருகும்.
தீபதரிசனம் பாவவிமோசனம்
சிவனுக்குரிய பஞ்சபூதத்தலங்களில் அக்னிதலமாகத் திகழ்வது திருவண்ணாமலை. இறைவன் அக்னி வடிவமாகத் திகழ்வதால் இங்கு திருக்கார்த்திகை நாளில் தீபமேற்றி வழிபாடு செய்கின்றனர். இந்த தீபத்தை தரிசிப்போர் பெறும் நற்பேறுகளை கார்த்திகைத் தீபவெண்பா கூறுகிறது.
புத்தி தரும் தீபம்; நல்ல புத்திர சம்பத்து முதல்
சித்தி தரும் தீபம் சிவதீபம்- சக்திக்கு
உயிராகும் சோணமலை ஓங்கிவளர் ஞானப்
பயிராகும் கார்த்திகை தீபம்.
திருவண்ணாமலை தீபத்தை தரிசிப்போர் நல்ல புத்தி, புத்திரபாக்கியம், காரிய சித்தி, ஞானம் ஆகிய நலன்களைப் பெற்று வாழ்வர்.
21 தலைமுறைக்கு புண்ணியம்
திருவண்ணாமலை தீபத்தைப் பார்ப்பவர்களுக்கு 21 தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும் என்கிறது அருணாசல புராணம். இந்த புராணத்தின் 159வது பாடலின்படி, திருக்கார்த்திகை தீபம் தரிசிப்பவர்களுக்கு உணவுத்தட்டுப்பாடு வராது. பார்த்தவர்களுக்கு மட்டுமின்றி அதைப்பற்றி சிந்தித்தவர்களுக்கும் கூட இடையூறு நீங்கி விடும். இவர்களது 21 தலைமுறை பிறவா வரம் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வளவு நன்மைகள் கிடைக்கும் போது, கார்த்திகை தீபத்தைக் காணாமல் இருக்கலாமா!  கார்த்திகை வெண்பா என்ற பாடலின்படி, அண்ணாமலையார் தீப தரிசனத்தால்புத்திசாலித்தனம் அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு அறிவார்ந்த புத்திரர்கள் பிறப்பர். பிறப்பற்ற நிலை கிடைக்கும்.
அண்ணாமலை கோபுரங்கள்
திருவண்ணாமலை கோயிலில் ஒன்பது ராஜகோபுரங்கள் உள்ளன. கிழக்கு கோபுரம் எனப்படும் பிரதான கோபுரம் 11 நிலை கொண்டது. உயரம் 217 அடி. தெற்கு
கோபுரத்தை திருமஞ்சனக் கோபுரம், மேற்கு கோபுரத்தை பேய்க்கோபுரம், வடக்கு கோபுரத்தை அம்மணி கோபுரம் என்பர். இரண்டாம் கோபுரத்தை வல்லாள மகாராஜா கோபுரம் என்றும், மூன்றாம் கோபுரத்தை கிளி கோபுரம் என்றும் கூறுவர். இதுதவிர, மூன்று கோபுரங்கள் இங்கு உள்ளன.
கிரிவலம் சுற்ற நல்லநேரம்
திருவண்ணாமலை கிரிவலத்தை ராஜகோபுரத்தில் துவக்க வேண்டும். இந்த மலையின் உயரம் 2268 அடி. சுற்றளவு 14 கிலோ மீட்டர். நடந்து செல்பவர்கள் 4 முதல் 5 மணிக்குள் வலம் வந்துவிடலாம். உடல்நிலை முடியாதவர்கள் ஆட்டோ, கார்களில் ஒன்றரை மணி நேரத்தில் சுற்றிவர முடியும். இவர்கள் பவுர்ணமி அன்று கிரிவலம் வருவதை தவிர்ப்பது நல்லது. சாதாரண நாட்களில் சுற்றிவந்தாலே முழு பயனும் கிடைக்கும்.
கிரிவலம் துவங்குவோர் பவுர்ணமி அன்று இரவு 9 மணிக்கு மேல் நிலவொளியில் வலம் வருவது உடலுக்கு நல்லது. அன்று சந்திரபகவான் 16 கலைகளுடன் பரிபூரணமாக பிரகாசிப்பார். அந்த கிரணங்களை உடலில் ஏற்றால் மனோசக்தி அதிகரிக்கும்.
நான்கு லிங்க தரிசன பலன்
கிரிவலப்பாதையில் அஷ்டலிங்கம் எனப்படும் எட்டு லிங்கங்கள் உள்ளன. அவற்றில் நான்கு முக்கியமானவை.
* இந்திரன் தனது பதவியை நிலைநிறுத்திக் கொள்வதற்காக இந்த மலையை அங்கப்பிரதட்சணமாக வலம் வந்தார். அவருக்கு ஓர் இடத்தில் அண்ணாமலையார் காட்சி தந்தார். அந்த இடத்தில் இந்திரனின் பெயரைப் பெற்று இந்திரலிங்கமாக அமர்ந்தார். புதிதாக வேலைக்கு சேர்பவர்களும், இடம் மாற்றலாகி செல்பவர்களும், பதவி உயர்வு பெறுவோரும் தங்கள் பணி தடங்கலின்றி நடக்க இந்த லிங்கத்தை வழிபடுவது வழக்கம்.
* வெப்பம் தொடர்பான நோய் உள்ளவர்கள், அக்னி லிங்கத்தை வணங்கினால் உடல் குளுமை பெறும் என்பர்.
* வருணபகவான் ஒற்றைக்காலால் அண்ணாமலையை வலம்வந்தபோது அவரைப் பாராட்டி சிவன் காட்சியளித்தார். அந்த இடத்தில் லிங்கமாக அமர்ந்தார். வருணனின் பெயரைப்பெற்று வருணலிங்கம் ஆனார். இவரை வணங்குவோர் சர்க்கரை நோய், சிறுநீரக நோய் மற்றும் தண்ணீரால் விளைகின்ற தோஷங்கள் நீங்கி நலம்பெறுவர்.
* குபேர பகவான் சிரசுக்கு மேல் இரண்டு கரங்களையும் உயர்த்தி குதிகாலை மட்டும் ஊன்றி இந்த மலையை வலம் வந்தார். அவருக்கு சிவன் லிங்கவடிவில் காட்சி தந்து குபேரலிங்கம் என பெயர் பெற்றார். சிரமப்பட்டு சேர்த்த பணம் நிலைத்து நிற்க இவரை வணங்குவர்.
அனலே.........அண்ணாமலையே!
பார்வதிதேவிக்கு திருவண்ணாமலை தீபோற்ஸவ மகிமை குறித்து கவுதம மகரிஷி எடுத்துரைத்ததாக ஸ்கந்த புராணம் விவரிக்கிறது...
திருக்கார்த்திகை திருநாளில் திருவண்ணாமலையை கிரிவலம் வரும் வாய்ப்பு எளிதில் கிடைக்காது; வாய்ப்பு கிடைத்தவர்கள் பெரும் புண்ணியசாலிகள். கார்த்திகை மகாதீபத்தைத் தரிசித்தவருக்கு மறுபிறப்பு இல்லை. ஒரு மண்டலமோ, பதினோரு நாட்களோ கிரிவலம் வருதல் சிறப்பு. முடியாதவர்கள், கார்த்திகை தீபத்திருநாள் அன்றாவது உரிய நியதிகளைக் கடைப்பிடித்து அண்ணாமலையை கிரிவலம் வந்தால்... ஒவ்வொரு அடிக்கும் ஓர் அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும். திருக்கார்த்திகையில் ஈசனுக்கு நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றால் தீபமேற்றி வழிபடுதலும், சிவாலயங்களில் உள்ள தீபங்களை வணங்குதலும் அளப்பரிய நன்மைகளைத் தரும்; அனைத்து தர்மங்களையும் செய்த பலனும், கங்கை முதலான எல்லா புண்ணிய நதிகளிலும் நீராடிய பலனும் கிடைக்கும்.
தீப தரிசனம் காணச் செல்பவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்வதுகூட மிகப்பெரிய புண்ணியத்தைத் தரவல்லது. மகாதீபத்தை பக்தியோடு தரிசித்தவரை நாம் கண்ணால் கண்டாலே நமது பாவங்கள் விலகும். எனில், தீபத்தை தரிசித்தவருக்கு எத்தகைய புண்ணியம் கிடைக்கும்?! ஆயுளில் ஒரு முறையாவது திருவண்ணாமலை மகாதீபத்தை தரிசிப்பவரது சன்னதி வளம் பெறும்; அவருக்கு மறுபிறவி என்பதே இல்லை; அத்தகையவர், மேலான தேவ நிலையினை அடைகின்றார்கள்.
கோயிலை வலம் வரும் முறை
திருவண்ணாமலை கோயிலை வழிபடும் முறையைத் தெரிந்து கொள்ளுங்கள்.
* முதலில் அண்ணாமலையார் கிழக்கு கோபுர வாயிலை வணங்கவேண்டும்.
* பின், தெற்கு கோபுரம், மேற்கு கோபுரம் இரண்டையும் வணங்கி பின் வடக்கு கோபுரத்தை வணங்க வேண்டும். வடக்கு கோபுர வாயில் எதிரே உள்ள நான்குமாடவீதி வழியில் உள்ள பூதநாராயணரையும், பின் இரட்டைப் பிள்ளையாரையும் வணங்க வேண்டும்.
* கிழக்கு கோபுர வாயிலின் இடப்புறம் வீற்றிருக்கும் விநாயகரை வழிபட வேண்டும்.
*வலப்புறம் உள்ள சாமுண்டேஸ்வரியை வணங்கி கம்பத்து இளையனாரை (முருகப்பெருமான்) தரிசிக்க வேண்டும்.
* சிவகங்கை தீர்த்தத்தின் அருகே உள்ள கணபதியை வணங்கியதும், நந்தீஸ்வரரை தரிசிக்கவேண்டும்.
* உள்ளே சென்று அடுத்த கோபுரவாயிலைக் கடந்து,இடப்புறம் திரும்பி பிரம்மலிங்கத்தை வணங்கி, படியேறிச் சென்று திருவண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்.
பின், உண்ணாமுலையம்மனை தரிசித்தபின் கிரிவலத்தை துவங்க வேண்டும்.
ஜலால் என்றால் என்ன?
பார்வதிதேவியை சிவபெருமான், தன் இடப்பாகத்தில் ஏற்று அர்த்தநாரீஸ்வரர் ஆனதைக் குறிக்கும் வகையில், கார்த்திகையன்று மாலையில் திருவண்ணாமலை கோயிலுக்குள் அர்த்தநாரீஸ்வரர் புறப்பாடு நடக்கும். இந்த ஒருநாள் மட்டுமே இவருடைய தரிசனம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கொடிமரத்தின் அருகே பரணிதீபங்கள் ஒன்று சேர்ந்ததும், தீ பந்தத்தை அடையாளமாகக் காட்டுவர். அதற்கு ஜலால் என்று பெயர். உடனே, மலையில் கார்த்திகைதீபம் ஏற்றப்படும். மலைதீபத்தை ஏற்றும் உரிமை பர்வதராஜ குலமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்கும் தொழிலைக் கொண்ட இவர்கள் தங்கள் குலதெய்வமாகிய பார்வதி தேவிக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் இவ்வழிபாட்டைச் செய்கின்றனர். இவர்கள், காலையில் கோயில் நிர்வாகத்தினரிடம் தீபம் ஏற்றும் மடக்கு, நெய், திரி ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டு மலையேறுவர். முற்காலத்தில் வெண்கலப்பாத்திரத்தில் கார்த்திகைதீபம் ஏற்றப்பட்டு வந்தது. 1991ல் இரும்புக் கொப்பரையாக மாற்றப்பட்டது. 92 கிலோ செம்பும், 110 கிலோ இரும்புக் கொப்பரையில், மூன்று நாட்களுக்கு தொடர்ந்து தீபம் எரிந்து கொண்டிருக்கும். சுற்றியுள்ள ஊர் மக்கள் தங்கள் வீட்டிலிருந்தே தீபத்தை வழிபடுவர்.
இவ்ளோ பேரு இருக்கா
அண்ணாமலையாருக்கும், அவரது துணைவியான அபிதகுஜாம்பிகைக்கும் இன்னும் பல பெயர்கள் உள்ளன. கண்ணார் அமுதன், பரிமள வசந்தராஜன், அதிரும் கழலன், கலியுக மெய்யன், தியாகன், தேவாராயன், மெய்யப்பன், அபிநய புஜங்கராஜன், புழுகணி பிராப்தன், (புழுகு என்பது வாசனைத்திரவியம்) மன்மதராஜன், வசந்த விநோதன், மலைவாழ் மருந்தன், வசந்தவிழா அழகன், திருவண்ணாமலை ஆண்டார், திருவண்ணாமலை ஆழ்வார், திருவண்ணாமலை உடையார், அண்ணா நாட்டு உடையார்... இவையெல்லாம் அண்ணாமலையாரின் வேறு பெயர்கள். அபிதகுஜாம்பிகை என்பது அம்பாளின் சமஸ்கிருதப் பெயர். இதற்கு வற்றாத செல்வமுடையவள் எனப் பொருள். இதையே தமிழில் உண்ணாமுலையம்மை என்பர். தாய்ப்பால் குறையாத தாய் உலகில் இல்லை. ஆனால், இவளிடம் தாயன்பு குறைவதே இல்லை. கேட்டவர்க்கு கேட்டதைத் தரும் தயாபரியாகத் திகழ்கிறாள். இதையே தமிழில் உண்ணாமுலையம்மை என்பர். திருக்காமகோட்டமுடைய தம்பிராட்டியார், உலகுடைய பெருமான் தம்பிராட்டி என்ற பெயர்களும் உண்டு.
சொக்கப்பனை
கார்த்திகையன்று கோயில்களில் சொக்கப் பனை என்னும் தீபவிழா கொண்டாடப்படும். இதுவே உலக வழக்கில் சொக்கப் பானை என்றாகிவிட்டது. திருக்கோயில்களில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம் விசேஷமான நிகழ்ச்சி. கோயிலிலிருந்து சற்று தொலைவில், நெடிதுயர்ந்த தென்னை அல்லது பனை மரத்தை நட்டு, அதனை ஓலையால் சூழக்கட்டி, உச்சியிலிருந்து தீபமிட்டு படிப்படியாக அடிவரை நெருப்புப் பந்தம் செய்வார்கள். இந்தக் காட்சி ஜோதிமயமாக இருக்கும். இந்த தீபதண்டத்தை திருக்கார்த்திகையன்று பார்த்து தரிசிக்க வேண்டும். இறைவன் ஒளி வடிவமாக இருப்பவன். தீப மரமான சொக்கப்பனையின் ஒளியில் கோபுரமும், கோயிலும், மலை தீபமும் கண்டு களிப்பது எல்லையில்லாத புண்ணியம் அளிக்கும். சொக்கப் பனை சுடர் விட்டு எரியும் போது தங்கம் உருக்கிய தழல் போல் முப்பதடி உயரம் இருக்கும். வைக்கப்பட்ட மரம் எதுவாக இருந்தாலும் சொக்கத் தங்கம் போன்று ஜொலிக்கும்.
கார்த்திகை தீபத்தன்று சொக்கப் பனையாக நட வேண்டிய மரம், தென்னை மரம் என்பது ஆகமவிதி. தென்னை இல்லையென்றால் பனை மரம் சேர்க்கலாம்; இது மத்திமம். கமுகு மரம் அதமம் என்பர். சொக்கப் பனைக்கு மற்றைய மர வகைகளை உபயோகிக்கக் கூடாது என்பது காரண, காரிய, விசயம் என்னும் மூன்று ஆகமங்களிலும் கூறப்பட்டுள்ளது. ஒரு கோயிலின் கர்ப்பகிரக உயர அளவுக்கு கொளுத்தப்படுகின்ற மரம் இருக்க வேண்டும். அதில் பனை ஓலைகள் சூழ்ந்து கட்டப்பட வேண்டும். காய்ந்த தென்னை ஓலை, கமுகு ஓலை, வாழைச் சருகுகள் மற்றும் காய்ந்த இதர சருகுகளையும் சூழக் கட்டலாம். இதனை ஒளிமரம் என்றும் சொல்வார்கள். நாள்தோறும் ஆலயங்களுக்குச் சென்று ஆண்டவனைத் தொழுது தூப தீபம் பார்த்துப் பரவசமடைகிறோம். ஆனால் திருக்கார்த்திகையன்று கோயில் விமானம், கோபுரம், மதிற்சுவர், மலையுச்சி, பிராகாரங்கள் மற்றும் ஊர் முழுமையும் ஒளி வெள்ளத்தில் இருக்கும் அற்புத நிகழ்ச்சியை அனுபவித்து பக்தியைப் பாராட்டுவது திருக்கார்த்திகை நன்னாளில்தான். சொக்கப் பனையும் ஒரு ஜோதி தரிசனம்தான்.
சொக்கப்பனை ஏற்றுவது எப்படி
பனை மரம் ஒன்றை நட்டு, சுற்றிலும் ஓலைகளைக் கட்டி விட வேண்டும். சொக்கப்பனை முன்பு சுவாமி சப்பரத்தில் ஊர்வலமாக வருவார். சுவாமிக்கு தீபாராதனை முடிந்ததும், அந்த கற்பூரத்தைக் கொண்டே அர்ச்சகர் சொக்கப்பனையில் தீ மூட்டுவார். மக்கள் சிவாயநம, நமசிவாய, சரவணபவாய நம, சுப்ரமண்யாய நமஹ, அண்ணாமலைக்கு அரோகரா என்ற மந்திரங்களைச் சொல்லி வணங்க வேண்டும்.
சொக்கப்பனை-பெயர்க்காரணம்
கார்த்திகை தீபம் பார்த்தால் பாவம் நீங்கும். பாவம் நீங்கினால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும். சொர்க்கப்பனை என்பதே திரிந்து சொக்கப்பனை ஆனது. மற்றொரு காரணமும் உண்டு. சொக்கு என்றால் அறியாமை. இந்த உலக வாழ்வு நிலையானது என்ற அறியாமையில் மனிதர்கள் வாழ்கிறார்கள். அதன் காரணமாக பல பாவச்செயல்களைச் செய்து சொத்து சுகம் சேர்க்கிறார்கள். அந்த அறியாமையை நீக்கும் தீபப்பனையே சொக்கப்பனை என்னும் பெயர் பெற்றது.

திருக்கார்த்திகை தோன்றிய விதம்


திருக்கார்த்திகை தோன்றுவதற்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றது. அதில் ஒன்று ஒருமுறை உமாதேவி சிவனின் கண்களை விளையாட்டாக கைகளால் மறைத்தாள். அப்போது பிரபஞ்சமே இருள்மயமானது. உயிர்கள் அனைத்தும் துயரில் ஆழ்ந்தன. இச்செயலால், தேவிக்கு பாவம் உண்டானது. விமோசனம் தேடி காஞ்சிபுரம் சென்று சிவனை நோக்கி தவத்தில் ஆழ்ந்தாள். இறைவனும் தேவிக்கு காட்சியளித்து திருக்கார்த்திகை நாளில் திருவண்ணாமலை வரும்படி அருள்புரிந்தார். தேவியும் அண்ணாமலையிலுள்ள பவழக்குன்று மலையில் இருந்த கவுதம மகரிஷி உதவியுடன் பர்ணசாலை அமைத்து தவம் செய்தாள். பவுர்ணமி சந்திரன் கார்த்திகையில் சஞ்சரிக்கும் வேளை வந்தது. இறைவன் தேவிக்கு காட்சியளித்து, இடப்பாகத்தில் ஏற்று அருள்புரிந்தார்.
இந்தத் திருக்கார்த்திகை விழா பிறந்ததற்கு மற்றொரு காரணம். ஒருசமயம் திருக்கயிலாயத்தில் பரமேஸ்வரனும் அம்பிகையும் எழுந்தருளி இருக்கும் போது, அங்கே நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. விளக்கு ஒளி இழக்கும் தருணம் எலி ஒன்று அங்கு வந்தது. நெய்யின் வாசனை அறிந்து அதை உண்ண நினைத்துத் திரியை இழுத்தது. தூண்டி விடப்பட்டதால் தீபம் பிரகாசமாக எரிந்தது. ஒளி மிகுந்ததனால் எலி ஓட ஆரம்பித்தது. ஒளியைத் தூண்டிய எலிக்கு இறைவன் அருள் கிடைத்தது. எலிக்கு அவர் மானிடப் பிறவி கொடுத்தார். அதற்கு அரச போகமும் அரண்மனை வாழ்வும் தந்தருளினார். முன்ஜென்மத்தில் எலியாய் இருந்தது, அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாய்ப் பிறந்தார். எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியானார். கூடவே செருக்கும் வளர்ந்தது. ஒருநாள் அகங்காரத்துடன் திருக்கோயிலுக்குச் சென்றார். பட்டாடைகள் தரையில் புரள அலட்சியத்தோடு நடந்து சென்றதால், அங்கிருந்த அகல் விளக்கின் தீப்பொறி சக்கரவர்த்தியின் மீது பட்டுப் பற்றி எரிந்தது, உடல் புண்ணாயிற்று, செருக்கு அடங்கிய சக்கரவர்த்தி இருகைகூப்பி ஆண்டவனை நோக்கிப் பிரார்த்தித்தார். தனது உடம்பில் ஏற்பட்ட ரணத்தைப் போக்கியருளுமாறு வேண்டினார்.
தீபப்பொறியால் ஏற்பட்ட ரணத்திற்கு நாள்தோறும் திருக்கோயிலில் தீபவரிசைகளை ஏற்றித் தொழுது கொண்டு வா. காலப்போக்கில் உன் நோய் நீங்கும்! என்று இறைவன் அசரீரியாகச் சொல்ல, மன்னன் மகிழ்ச்சியுற்றான். நாள்தோறும் கோயிலுக்குச் சென்று வரிசை வரிசையாக நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டான். இவ்வாறு திருவிளக்கு ஏற்றி வந்த காலத்தில் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் கூடிய பவுர்ணமி திதியில் இறைவன் திருவுள்ளம் இரங்கியது. இறைவன் ஜோதி வடிவில் வந்து, ஒளிப்பிழம்பாக நின்றான். மன்னனின் நோய் நீங்கியது. இவ்வாறு தொடங்கிய தீப வரிசை வழிபாடே கார்த்திகை தீபத் திருவிழாவாக உயர்ந்தது என்பர். காலப்போக்கில் அனைத்து வர்ணத்தாரும் இத்தகைய ஒளி வழிபாட்டில் ஈடுபட, இது பொது வழிபாடாக உருவானது. சோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே என்று இறைவனைப் போற்றுகின்றார் மாணிக்கவாசக பெருமான்.