காயத்ரியைக் காட்டிலும் சிறந்த மந்திரம் இல்லை.
தாயை விஞ்சிய தெய்வம் இல்லை.
காசியை விஞ்சிய புண்ணிய தீர்த்தம் இல்லை.
ஏகாதசியை விஞ்சிய வேறு விரதமும் இல்லை
என்பது முன்னோர் வாக்கு.
சமஸ்கிருதத்தில் ஏகாதசி என்பது தமிழில் பதினொன்று எனப்பொருள். அமாவாசையிலிருந்து மற்றும் பௌர்ணமியிலிருந்து பதினொராவது நாளாகும். இந்நாளில் விரதம் இருப்பதை எல்லா சாஸ்த்திரங்களும் வழியுருத்துகின்றன. மற்ற விரதங்களை விட ஏகாதசி விரதம் கடைபிடிப்பது அதிமுக்கியமானதாகும்.தீட்டுக்காலத்தில் கூட ஏகாதசி விரதம் மேற்கொண்டால் பயன் உண்டு.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன்
செவ்வடி செவ்விதிருக்காப்பு
வைகுண்ட ஏகாதசி விரதம்
வைகுண்ட ஏகாதசி விரதம் பக்தியிலும், புண்ணியத்திலும் உயர்ந்து சிறந்து விளங்குகிறது.மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம் என்பது திருமால் வாக்கு. இதனால் இவ்விரதம் மகிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.ஆண், பெண் அனைவரும் பின்பற்ற வேண்டிய பெருமைமிக்க விரதமானது வைகுண்ட ஏகாதசி விரதம்.
ஏகாதசி திதி
பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியை ஒரு பக்ஷம் என்கிறோம். கிருஷ்ண பக்ஷம் (தேய்பிறை), சுக்லபக்ஷம் (வளர்பிறை) ஆகிய இந்த இரண்டு பக்ஷங்களில் ஒவ்வொன்றிலும் 11வது நாளின் (திதியில்) வருவது ஏகாதசி ஆகும். இதில் மார்கழி மாத சுக்லபக்ஷ (வளர்பிறை) ஏகாதசியை நாம் வைகுண்ட ஏகாதசியாக வணங்குகிறோம்.
கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் ஆகிய இந்த பதினொரு இந்திரியங்களால் செய்யபடும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் ஏகாதசி விரதம் இருந்தால் அழிந்து விடுவது உறுதி என்று முன்னோர்கள் கூறுவர்.ஏகாதசியன்று பகல் உறக்கம், இருவேளை சாப்பிடுதல், உடலுறவு ஆகாது. எனவே ஏகாதசியன்று இந்து சமயத்தவர் திருமண நிகழ்வுகளைத் தவிர்க்கின்றனர்.
முக்கோடி ஏகாதசி
இராவணனின் இன்னல்களை சகிக்க முடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழி மாத சுக்லபக்ஷ (வளர்பிறை) ஏகாதசியன்று நாராயணனை வணங்கித் தங்கள் துன்பங்களை கூறினர். பகவானும் பிரம்ம தேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்தருளினார். முக்கோடி தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு. தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற வேண்டி இரவும், பகலும் விரதம் இருந்து பாற்கடலை கடைந்த போது அமுதம் வெளிப்பட்டது. துவாதசியன்ற மஹாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளியே வந்து தேவர்களுக்கு, திருக்காட்சி அளித்து அவர்களுக்கு அருளாட்சி புரிந்தார். அன்று முதல் ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு இந்தப் பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, மறுபிறவியில் வைகுண்டவாசம் சொர்க்கவாசல் வழங்குவதாக புராணங்களில் கூறப்படுகிறது.
ஏகாதசி பற்றி பத்ம புராணத்தில் கூறப்படும் கதை
திரேதாயுகத்தில் முரன் என்ற பெயரில் ஒரு கொடிய அரக்கன் வாழ்ந்து வந்தான். அவன் தேவர்களுக்கும், தவ முனிவர்களுக்கும் பல கொடுமைகள் செய்தான். அவனது தொல்லைகளைத் தாங்க முடியாத தேவர்களும், முனிவர்களும் திருமாலிடம் சென்று முறையிட்டனர். அரக்கன் முரனை அழித்து தேவர்களைக் காக்க திருமால் முடிவு செய்து சக்கராயுதத்துடன் முரனுடன் போருக்கு புறப்பாட்டார்.
அசுரனுக்கும், திருமாலுக்கும் கடும்போர் நடந்தது. ஆண்டவனின் சக்கராயுதத்திற்கு முன் அரக்கன் சக்தியற்றுப் போனான். இருந்தாலும் அவன் பல மாய வடிவங்களில் போர் புரிந்து வந்தான். தினமும் காலையில் சூரிய உதயத்தில் இருந்து சூரிய அஸ்தமனம் ஆகும்வரை போர் நடக்கும்.
தினமும் போர் முடிந்ததும் திருமால் வத்திரிகாசிரமத்தில் உள்ள ஒரு குகைக்கு சென்று இளைப்பாறுவார். பொழுது விடிந்ததும், அரக்கனுடன் போர் புரிய போர்களத்திற்கு செல்வார்.ஒரு நாள் ஆசிரமத்தில் திருமால் படுத்து இருந்த போது அங்கு வந்த முரன், அவரை திடீரென்று தாக்கத் தொடங்கினான். அப்போது பெருமாளின் உடலில் இருந்து ஒரு மகத்தான சக்தி, பெண் வடிவில் எழுந்து அரக்கன் முன் வந்து நின்றாள். அழகியைக் கண்டதும் அவளது அழகில் அரக்கன் மயங்கினான். ஆனால் படைக்கலங்களுடன் விசுவரூபத்துடன் தோற்றமளித்த அந்தப் பெண் ஆங்காரத்துடன் அரக்கனை அழித்தாள்.
இதனால், திருமால் மனம் மகிழ்ந்தார். தமது எதிரில் நின்ற சக்தியை நோக்கி, சக்தியே, அசுரனை அழித்த உனக்கு ஏகாதசி என்று திருநாமம் சூட்டுகிறேன். அரக்கன் முரனை அழித்த இம்மார்கழி மாதத்தில் உன்னை விரதம் இருந்து வழிபடுவோருக்கு, யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம் என்று கூறினார். திருமால் கொடுத்த வரமே ஏகாதசியின் மகிமைக்கு காரணமாயிற்று.
அரக்கனை வென்று சக்தி வெளி வந்த மார்கழி மாதம் பதினோராவது நாளாக இருந்ததால், திருமாலின் சக்திக்கே ஏகாதசி என்ற பெயர் ஏற்பட்டது.தேவர்களும், முனிவர்களும் ஏகாதசியன்று விரதம் இருந்து இழந்த தங்களது சக்தியை மீண்டும் பெற்றனர்.
ஏகாதசி விரதம் இருப்பது எப்படி?
1.ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாள் தசமி அன்று பகலில் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு மற்றும் ஏகாதசியன்று அதிகாலையில் கண்விழித்து குளித்துவிட்டு, பூஜை செய்து விரதம் இருக்க வேண்டும்.
ஏகாதசி திதி முழுவதும் பட்டினி இருக்க வேண்டும்.ஆனால் உண்ணாமல் இருக்க முடியாதவர்கள் நெய், தேங்காய் எண்ணெய், நிலக்கடலை, காய்கனிகள்,பழங்கள்,பால், தயிர் போன்றவற்றை பகவானுக்கு படைத்து (பிரசாதமாக) உண்ணலாம்.
2.இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், பகவான் நாமங்களை சொல்லுவதுமாக இருக்க வேண்டும்.
3. ஏகாதசிக்கு மறுதினம் துவாதசி என்பர். துவாதசி அன்று உணவு அருந்துவதை பாரணை என்று கூறுவர்.
4.துவாதசியன்று அதிகாலையில் உப்பு, புளிப்பு முதலிய சுவையற்ற உணவாக சுண்டைக்காய், நெல்லிக்கனி, அகத்திக்கீரை இவைகளைச் சேர்த்து பல்லில் படாமல் ""கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!! என்று மூன்று முறை கூறி ஆல் இலையில் உணவு இட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
5.துவாதசி அன்று வைஷ்ணவ நாட்காட்டியில் காட்டியபடி குறிப்பிட்ட நேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும். விரதத்தை முடிப்பது என்பது நீர்கூட அருந்தாதவர்கள் துளசி தீர்த்தத்தையும், மற்றவர்கள் பகவான் கிருஷ்ணருக்கு தானிய உணவை படைத்து (பிரசாதமாக) உண்ணலாம்.ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது போலவே விரதத்தை முடிப்பது மிகமிக முக்கியம் இல்லாவிடில் விரதம் இருந்த முழுபலனும் கிடைப்பதில்லை.
6.உணவு சாப்பிடும் முன் அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும்.
7.8 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 80 வயதிற்குட்பட்ட பெரியவர்கள் ஆகியோர் விரதம் மேற்கொள்ளத் தேவையில்லை என்று சாஸ்திர நூல்கள் கூறுகின்றன
ஏகாதசி விரத மகிமை
பிரம்மன் படைத்த உயிர்களில் கொடூரமான பாவங்களையே அங்கங்களாக கொண்ட பாவ புருஷனும் ஒருவன். மக்களைப் பாவச்செயல்களில் செலுத்து கொடூரமான நரகத்தில் செலுத்துவதே அவனுக்கு விதிக்கப்பட்ட வேலை.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஒரு முறை எமலோகம் சென்று பார்த்த போது அங்கு உயிர்கள் தங்களுடைய பாவ விளைவுகளினால் கொடூரமான நரகங்களில் துன்புறுவதைக் கண்டார். அவர்களிடம் தங்களுடைய பாவ விளைவுகளினால் பொடூரமான நரகங்களில் துன்புறுவதைக் கண்டார். அவர்களிடம் கருணைகொண்ட பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஏகாதசி மகிமையை அவர்களுக்கு எடுத்துரைக்க, அதை அவர்கள் கடைபிடித்த உடனே பாவங்களிலிருந்து விடுபட்டு சொர்கக லோகங்களை அடைந்தனர். அது முதல் ஏகாதசி மகிமையால் எல்லோரும் புண்ணியபுருஷராக மாறி சொர்க லோகம் நிரம்பியது. நரகங்கள் வெறிச்சோடி காலியாகவும் ஆயின. பாவப்புருஷனுக்கு துளியும் வேலையில்லாமல் போனது. இதனால் பாவப்புருஷன் பகவான் கிருஷ்ணரிம் முறையிட அதற்கு பகவான் கிருஷ்ணர் ஏகாதசி அன்று தானியம், பருப்பு (அரிசி, தானியங்கள், பருப்புவகைகள், பயறுவகைகள், இட்லி,தோசை, சப்பாத்தி, புரி உப்புமா, கடுகு,உளுந்து தாளித்து, மற்றும் காய்கறிகளில் பீன்ஸ், அவரை, மொச்சைவகையறா) வகைகளை உண்பவர் உன் வசப்பட்டு கொடூராமான பாவங்கள் செய்த கர்மம் உண்டாகும் என்று வரமளித்தார்.
சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன்?
சொர்க்கவாசல் திறக்கப்படுவது பற்றி புராணங்களில் ஒரு கதை கூறப்படுகிறது. அவதார புருஷரான எம்பெருமானுடன் போரிட்டு, அவரின் அருள் பெற்ற மதுகைடவர்கள் என்ற அரக்கர்கள் இருவர், தாம் பெற்ற வைகுண்ட இன்பத்தை உலகில் உள்ள எல்லோரும் பெற வேண்டும் என்று விரும்பி ஆண்டவனிடம் வைகுண்ட ஏகாதசி தினத்தில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக தாங்கள் அர்ச்சாவதாரத்தில் வெளிவரும்போது தங்களை தரிசிப்பவர்களும், தங்களை பின்தொடர்ந்து வருபவர்களும் அவர்கள் எத்தகைய பாவங்கள் செய்து இருந்தாலும் அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
அவர்களின் வேண்டுகோளை பெருமான் ஏற்றுக் கொண்டார். அதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சாமி பவனி வரும் நிகழ்ச்சி ஏற்பட்டது
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.