நாம் எல்லாருமே அடிக்கடி தவறுகிறோம். பேச்சில் தவறாதோர் நிறைவு பெற்றவராவர். அவர்களே தம் முழு உடலையும் கட்டுப்படுத்த வல்லவர்கள். குதிரைகளை அடக்க அவற்றின் வாயில் கடிவாளத்தைப் போடுகிறோம். இவ்வாறு குதிரைகளை முழுவதுமாகக் கட்டுப்படுத்துகிறோம். கப்பல்களைப் பாருங்கள். அவை எத்துணை பெரியனவாக இருந்தாலும் கடுங்காற்றால் அடித்துச் செல்லப்பட்டாலும் கப்பலோட்டுவோர் சிறியதொரு சுக்கானைக்கொண்டு தாம் விரும்பும் திசையை நோக்கி அவற்றைச் செலுத்துகின்றனர். மனித நாவும் அதைப்போல ஒரு சிறிய உறுப்புதான். ஆனால் பெரிய
காரியங்களைச் சாதிப்பதாக அது பெருமைப்பட்டிருக்கிறது.
பாருங்கள், சிறியதொரு தீப்பொறி எத்துணை பெரிய காட்டை கொளுத்தி விடுகிறது. நாவும் தீயைப் போன்றதுதான். நெறி கெட்ட உலகின் உருவே அது. நம்முடைய உறுப்புகளுள் ஒன்றாக அமைந்திருக்கும் இந்த நா நம் உடல் முழுவதையும் கறைப்படுத்துகிறது. அது நம் வாழ்க்கைச் சக்கரம் முழுவதையும் எரித்து விடுகிறது; எரிப்பதற்கான நெருப்பை நரகத்திலிருந்து பெறுகிறது.
காட்டில் வாழ்வன, பறப்பன, ஊர்வன, கடலில் வாழ்வன ஆகிய எல்லா உயிரினங்களையும் மனிதர் அடக்கி விடலாம்; அடக்கியும் உள்ளனர். ஆனால் நாவை அடக்க யாராலும் முடிவதில்லை. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அது கொடியது; சாவை விளைவிக்கும் நஞ்சு நிறைந்தது. தந்தையாம் ஆண்டவரைப் போற்றுவதும் அந்நாவே;
கடவுளின் சாயலாக உண்டாக்கப்பட்ட மனிதரைத் தூற்றுவதும் அந்நாவே.
போற்றலும் தூற்றலும் ஒரே வாயிலிருந்து வருகின்றன. இவ்வாறு இருத்தலாகாது. ஒரே ஊற்றிலிருந்து நன்னீரும், உவர் நீரும் சுரக்குமா? அத்திமரம் ஒலிவப் பழங்களையும் திராட்சைச்செடி அத்திப் பழங்களையும் கொடுக்குமா? அவ்வாறே உப்புநீர் சுனையிலிருந்து நன்னீர் கிடைக்காது’’
& (யாக்கோபு 3: 2&12)
மனித வாழ்க்கையில் சகலமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த கால அளவுகளுக்கேற்ப எல்லாம் நடந்தபடி இருக்கின்றன. எல்லாமே முறைப்படுத்தப்பட்டுள்ளமையால், அடுத்த நிமிடத்தில் நமக்கு என்ன நேரும் என்பது நமக்குத் தெரியாது. இறைவனால் கொடுக்கப்பட்டுள்ள நேரத்தை, வீணான வார்த்தைகளைப்பேசி, மற்றவர்களின் நிம்மதியை சீர்குலைத்து உருப்படியில்லாத செயல்பாடற்ற தன்மையால் காலத்தை வீணடிக்கிறோம். எதற்காக நமக்கு வாழ்க்கை கொடுக்கப்பட்டது? அந்த வாழ்க்கையின் பயனை அனுபவித்து அல்லல்படுவோர்க்கு ஆறுதல் அளித்து, இல்லாதவர்க்கு இருப்பதைக்கொடுத்து, இன்பமுடன் வாழ்வதை விடுத்து, வஞ்சகம், பொறாமை, பிறரை அவமதித்து அடக்கி ஆளும் தன்மையினால் சஞ்சலத்துக்குள்ளாகி மனதை அலைபாய விட்டு நோயில் வீழ்வானேன்?
நம்மால் கூடிய மட்டும் வக்கணைப் பேச்சைக் குறைத்துக்கொள்வோம். ஏனெனில் நம் பேச்சில் தொனிக்கும் வார்த்தைகள் மற்றவர் கருத்துக்கு இடையூறாகத் தோன்றும். அதனால் நம் வார்த்தை நம்மைக் கறைப்படுத்தும். அமைதியுடன் இருந்தாலே அனைத்தும் நலமாகும். நமது பேச்சில் ஒரு குற்றமும் இல்லாத போதிலும் நாம் பேசுவது குற்றம் எனக் கூறுபவர்களின் முன்னே நாம் ஏன் பேச ஆசைப்பட
வேண்டும்?
‘‘தீங்கு புரிவோர் தீங்கு புரிந்துகொண்டே இருக்கட்டும்; இழுக்கானவற்றைச் செய்வோர் இழுக்கானவற்றைச் செய்துகொண்டே இருக்கட்டும்; தூயோர் தூய்மையானவற்றைச் செய்துகொண்டே இருக்கட்டும்’’ & (திருவெளிப்பாடு 22: 11)
பற்பல வார்த்தைகளைப் பயன்படுத்துகிறவர், தன் ஆன்மாவைக் காயப்படுத்துகிறார். அநியாயமாய் பிறர்மீது பழி கூறி, அதிகாரத்தை அபகரித்துக் கொள்பவர், பகைக்கப்படுவார். தீநெறியாளனான மனிதனுக்கு தீமைகளில் வெற்றியுண்டு; அந்த
வெற்றியே அவனுக்குக் கேடாகும்.
பக்கத்து வீட்டில் நின்று கொண்டிருந்த ஒரு பெரிய மரத்தின் மீது அடுத்த வீட்டுக்காரனுக்கு ஒரு கண். வெட்டி விற்றால் நிறைய காசு பார்க்கலாமே என்று நினைத்தான். அதற்கு என்ன
செய்வதென்று யோசித்தான். ஒரு யோசனை தோன்றியது. பக்கத்து வீட்டுக்காரனிடம் சென்றான். ‘‘உங்களுக்குத் தெரியுமா? இந்த மரம் வீட்டு வாசலருகே இருந்தால், குடும்பத்தில் கஷ்டமாகுமாம்’’ என்றான்.
‘‘அப்படியா?’’ கொஞ்சம் ஆச்சரியமாய்க் கேட்டான் பக்கத்து வீட்டுக்காரன். பிறகு யோசித்துப் பார்த்தான். அவன் வாழ்க்கையில் சாதாரணமாய் நடந்த விஷயங்கள்கூட கஷ்டங்களாய்த் தெரிந்தன.
‘‘அந்த மரத்தை வெட்டிப் போட்டுவிட்டால் உன் கஷ்டங்களெல்லாம் விலகிவிடும்’’ என்று மேலும் தூண்டினான் முதலாமவன்.
மரத்துச் சொந்தக்காரன் சம்மதிக்க, காரியங்கள் வேகமாய் நடந்தது. மரம் வெட்டப்பட்டது. வெட்டிய மரத்தை அவனே எடுத்துக்கொண்டு போனான். கடையில் எடைக்குப் போட்டான். நல்ல காசு கிடைத்தது. அறிவுரையைக் கேட்டவனின் கஷ்டம் தீரவில்லை. அறிவுரையைக் கொடுத்தவனின் பணக்கஷ்டம் தீர்ந்தது.
அறிவுரைகளை மட்டும் பார்க்கக் கூடாது. அந்த அறிவுரையை யார், எதற்காகச் சொல்கிறார்கள் என்பதையும் யோசிக்க வேண்டும்.சிலர் கடவுளுடைய தீர்ப்புக்கு அஞ்சுவதைவிட, மனிதர்களின் தீர்ப்புக்கு அஞ்சுகிறார்கள். மனிதரால் எதிர்பாராமல் கிடைக்கும் தீர்ப்பு, மனிதர்களைப் பெரும் அவதிக்கு ஆளாக்குகின்றன. ஆராயாமல் அவசரமாய், தனக்கு வேண்டியவர்களைக் காப்பாற்ற முயலும் தீர்ப்பாக மாறி விடுகின்றது. இதனால் பாதிக்கப்படுபவர் நிலை என்ன என்பதை தீர்ப்பிட்டவர் நினைத்துப் பார்ப்பதில்லை.
மூடனுக்கு நண்பன் இல்லை. பொய்யான நாவினால் வரும் கேடு, உயரே இருந்து கட்டாந்
தரையில் விழுகிறவனுக்கு ஒத்தது. இவ்வாறே தீயோருடைய அழிவு வெகுவிரைவில் வரும். நீதியை நிறைவேற்றுகிறவன் உயர்த்தப்படுவான். பெரியோருக்குப் பிரியப்படுகிறவன் அக்கிரமத்தைத் தவிர்ப்பான்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.