sai yoga centre

Friday, November 11, 2011

படிப்பு வரம் தரும் பரிமுகன்

ஒரு பிரளயம் முடிந்த பின் திருமால் ஆலிலை மேல் பாலகனாய் யோக நித்திரையில் ஆழ்ந்திருந்தார். பிறகு விழித்தெழுந்த அவர் தன் நாபிக்கமலத்திலிருந்து நான்முகனைப் படைத்து, அவனுக்கு நான்கு வேதங்களையும் முறையாக உபதேசித்து, புது பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்குமாறு ஆணையிட்டார்.
ஒரு சமயம் திருமாலின் திருமேனியிலிருந்து தோன்றிய வியர்வைத் துளிகளில் மது, கைடபன் எனும் இரு அசுரர்கள் தோன்றினர். திருமாலிடமிருந்து தோன்றிய தைரியத்தில், தாங்களே படைப்புத் தொழிலை புரிய ஆசைப்பட்டு, நான்முகனிடமிருந்து வேதங்களை அபகரித்து, பாதாளத்தில் ஒளித்து வைத்தனர். வேதங்களை இழந்த பிரம்மா திருமாலிடம் முறையிட திருமால் குதிரை முகத்துடன் தோன்றி அசுரர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டு நான்முகனிடம் தந்தார்.

மது, கைடபரால் பெருமை இழந்த வேதங்களை, பரிமுகக் கடவுளாகிய ஹயக்ரீவர், உச்சி முகர்ந்து புனிதப்படுத்தினார். அந்த மூச்சுக் காற்றால் வேதங்கள் புனிதம் பெற்றன. ஆனாலும் அசுரர்களுடன் போரிட்ட வேகத்தில் ஹயக்ரீவர் உக்ரமாக இருக்கவே, அதைத் தணிக்க திருமகள் அவரது மடியில் அமர்ந்து அவரை சாந்தப்படுத்தினாள். அந்த நிலையில் அவர் லட்சுமிஹயக்ரீவர் என வணங்கப்பட்டார்.

வேதங்களை மீட்டதால் இவர் கல்விக் கடவுளானார். அந்த ஹயக்ரீவருக்கு பாண்டிச்சேரியில் ஒரு ஆலயம் உள்ளது. மகாலட்சுமியை இடது மடியில் அமர்த்திய திருக்கோலத்தில் அவர் சேவை சாதிக்கிறார்.
கருவறையில் ஹயக்ரீவ மூர்த்தியின் இடது கை தாயாரையும், தாயாரின் வலது கை எம்பிரானையும் அணைத்த வண்ணம் உள்ளன. இந்த சந்நதியில் அருளும் ஹயக்ரீவரை தரிசனம் செய்தால் தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரச்னைகள் விலகுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். மூவரின் கீழே சக்தி வாய்ந்த யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்விக்குரிய கடவுள்களில் ஹயக்ரீவ மூர்த்தி எனும் பரிமுகக் கடவுள் வழிபாடு தொன்மையானது. படிப்பில் மந்தமாக உள்ளவர்களும் பேச்சுத் திறன் குறை உள்ளவர்களும் இத்தலத்திற்கு வந்து பெருமாளை தரிசித்து அக்குறைகள் நீங்கப்பெறுகின்றனர்.
இத்திருத்தலத்தில் ஆவணி திருவோணத்தன்று தேர்த்திருவிழா பக்தர்களால் விமரிசையாக நடத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.