sai yoga centre

Friday, November 11, 2011

பேசும் கடவுள், பச்சைமலை முருகன்


பேசும் கடவுள், பச்சைமலை முருகன்!


‘‘முருகா, நான் இப்படியே கஷ்டப்பட்டுகிட்டே இருக்கணுமா? என் கஷ்டத்தை கொஞ்சம் கண்திறந்து பார்க்கமாட்டியா? கருணைக் காட்டு கடவுளே’’ என சாதாரணமாக இவன் முன்னால் கைக்கூப்பி நிற்க, கந்தன் கருணையோடு சிரிக்கிறான்.
‘உன் கஷ்டத்தை என்கிட்ட சொல்லிட்ட இல்ல; எல்லாம் பனியா மறைஞ்சிடும். நீ உன் வேலைய பாரு’ என தன்முன் கைகூப்பி நிற்பவரின் மனதோடு பேசுகிறான். மனதோடு பேசுகிறான் என்பது சத்தியம் என்பது இவன் திருமுக தரிசனம் கண்ட அத்தனை பேரும் சொல்லும் அனுபவ அதிசயம்.

பெரியவர்களிடம் மட்டுமல்ல, குழந்தைகளிடமும் கொஞ்சலாய் இந்த தெய்வக் குழந்தை பேசுவது கண்டு சிலிர்த்து போகிறார்கள்; சிலாகித்து பேசுகிறார்கள். அதுமட்டுமல்ல, வாழ்க்கையை ஓட்ட அடிப்படை வசதி தந்தால் போதும் என்று வேண்டியவரை கோடீஸ்வரனாக்கி குதூகலிக்கிறான் இந்த குகன்.
யார் இந்த அருள் குழந்தை?
பச்சைமலை முருகன். முருகன் என்றாலே அழகன். அவன் அருளால் அண்டியவரின் துயரங்களை எல்லாம் தூசாக்கி, மகிழ்ச்சியோடு வாழ வைக்கும்போது, பலன் பெற்றவர்களெல்லாம் தன் வீட்டுப் பிள்ளையாய் சீராட்டுவது இயல்புதானே! கோபிச்செட்டிப்பாளையம் நகரத்தில், பச்சைமலை முருகனை தங்கள் வீட்டுப் பிள்ளையாகக்தான் பக்தர்கள் சீராட்டுகிறார்கள்.
இவன் இங்கு வந்தமர்ந்த கதை என்ன?
ஈசனின் அம்சமான துர்வாச முனிவர், பொதிகைமலை சென்று திரும்பும் வழியில் குன்னத்தூர் வந்தடைந்தார். இத்தல ஈசனை தரிசித்த முனிவர், தினமும் சிவபூஜை செய்ய தகுந்த இடம் அங்கே உள்ளதா என கண்மூடி பார்த்தார். அவரது ஞான திருஷ்டியில் ஒரு பெரிய அரசமரமும் அதன் கீழ் பெரிய பாம்பு புற்றும் இருப்பதைக் கண்டார். அந்த இடத்தை நோக்கி நகர்ந்த துர்வாசர், வருண பகவானை வர வழைத்து நல்ல மழை பெய்யச் செய்து, அந்த இடத்தை குளிரச் செய்தார். மந்திரங்களால் தூய்மைப்படுத்தினார். அங்கு ஈசனை ஸ்தாபிதம் செய்து அற்புதமாய் ஒரு சிவபூஜை செய்தார்.
 பூஜையில் மூழ்கித் திளைத்த முனிவருக்குள் ஏனோ ஞானமயனாக முருகனைப் பற்றிய எண்ணம் பூத்துக் கொண்டே இருந்தது. பிரணவத்துக்கு பொருள் சொன்ன முருகனுக்கும் அதே எண்ணம் முகிழ்த்தது.
அந்தக் கணத்துக்காகவே காத்திருந்த ஈசன், ‘‘துர்வாசரே, கவலை வேண்டாம். உங்கள் மனம் தரிசிக்க ஏங்கும் முருகன், இங்கிருந்து அரைக்காத தூரத்தில், மரகதகிரி என்ற குன்றின் மேல் குடிகொண்டிருக்கிறான். மரகதவல்லி என்னும் திருநாமம் கொண்ட அன்னையின் திருவுருவ நிறத்தின் பெயராலேயே அக்குன்று பச்சைமலை என்று அழைக்கப்படுகிறது. அந்த மலையும் தாயன்போடு குமரனை சுமந்து நிற்கிறது. உன் ஆசைப்படி அழகனை தரிசித்து வா’’ என அசரீரியாய் சொன்னார்.
அரனின் ஆணைப்படி அங்கு சென்ற துர்வாசர், முருகனை மனங்குளிர தரிசித்தார். பிரபஞ்சம் உள்ளமட்டும் இங்கு வீற்றிருந்து மக்களுக்கு அருள்புரியுமாறு வேண்டி நின்றார். முருகனும் துர்வாசரின் வேண்டுதலை ஏற்று மக்களின் துயரை துடைத்து வந்தார். கால ஓட்டத்தில் மரகத
கிரியின் மகத்துவத்தை மக்கள் மறந்து போனார்கள்.
கலியுகத்தில் தனது அருளை மீண்டும் பொழிய விரும்பிய முருகன், குப்புசாமி கவுண்டர் என்பவரை அதற்கான கருவியாக்கிக் கொண்டான்.
குப்புசாமி கவுண்டர் தீவிர கடவுள் பக்தர். அவர் ஒருநாள் தனது பூஜையறையில் தியானத்தில் இருந்தபோது அவர் முன் ஜோதியாய்  தோன்றிய குமரன், பச்சைமலையில் தான் வீற்றிருப்பதையும் ஆலயத்தைப் புதுப்பிக்கும்படியும் கூறி மறைந்தான். குமரனின் வாக்கை கட்டளையாய் ஏற்ற அவர் திருப்பணி தொடங்க, பலரும் கைகொடுத்து உதவ, இன்று ஆலயம் பொலிவு மிகுந்து, அருள் பரப்பி நிற்கிறது.

ஆலயத்தில் மயில்வாகனன், வித்யாகணபதி, மரகதீஸ்வரர், மரகதவல்லி அம்மன், அருணகிரிநாதர் ஆகியோர் அருள்கிறார்கள். கருவறையில் பாலகனாய் வீற்றிருக்கும் பச்சைமலை முருகனை காணும் போது நம் கவலைகள் காண£மல் போகிறது. பழநி முருகனைப் போலவே மேற்கு நோக்கி, தங்கபீடத்தில் நின்ற கோலத்தில் அருள்கிறான் இந்த சிவபாலன்.
 சிவ சந்நதியில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியையும் மூலஸ்தான முருகனையும் நாம் ஒரே இடத்தில் இருந்து தரிசிக்கும் வகையில் அமைத்திருப்பது இத்தல விசேஷங்களில் ஒன்றாகும். இத்தல கல்யாண சுப்ரமணியரை பணிந்து நின்றால் வீட்டில் கெட்டிமேளம் கொட்டுவது நிச்சயம்.
இத்தல மூலவருக்கு தாரா அபிஷேகம் செய்வது பிரசித்தமான வழிபாடுகளில் ஒன்று. 108 லிட்டர் பால் கொண்டு 11 முறை ருத்ரம் ஓதி செய்யப்படும் இந்த வழிபாட்டால் நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வு கிடைக்கிறது.

அதே போல குழந்தை பேறு வேண்டி நிற்கும் தம்பதிகள் கந்தசஷ்டி விரதமிருந்து இத்தல நாதனை வழிபட, குழந்தை பாக்கியம் அருள்கிறான் குமரன். இந்த விரதத்திற்காக வருடத்திற்கு சுமார் 5000 பேர் இத்தலத்தில் காப்புக் கட்டிக் கொண்டு விரதமிருக்கிறார்கள்.

இத்தலத்தில், நவகிரக நாயகர்கள் தம்பதி சமேதராய்  தத்தமது வாகனங்களில் வீற்றிருந்து அருள்கிறார்கள். பச்சைமலை மீது அருளும் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் நடக்கும் வழிபாடுகளில் கலந்துகொண்டால் கடன், நோய் தீரும்.
பச்சைமலையேறி முருகன் முன்பு நிற்கும் நமக்கு என்ன வேண்ட வேண்டும் என்பதே மறந்து போகிறது. அந்த அழகிய திருமுகத்தை ஒரு முறை காண, மனம் அமைதியில் நிறைகிறது. ‘உன் குறை என்ன என எனக்கு தெரியும், கவலைப்படாதே!’ என புன்னகையோடு முருகன் பேசுவது நமக்குள் தெளிவாய் கேட்கிறது. பச்சைமலை முருகன் வேண்டியதை விரைவாக நிறைவேற்றி வைக்கும் தெய்வக்குழந்தை!
ஈரோடு மாவட்டம், கோபிச் செட்டிப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது பச்சைமலை முருகன் கோயில்.  

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.