sai yoga centre

Friday, December 16, 2011

கந்தசஷ்டி விரத முறைகள்

ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் சுக்கில பட்சத்துப் பிரதமை முதல் சஷ்டி வரையிலான ஆறு நாட்களில் முருகன் பக்தர்கள் கந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். 

முருகன் கோயில் உள்ள எல்லா இடங்களிலும் கந்த சஷ்டி விரதம் ஒரு பெருவிழாவாக நடக்கும். ஆறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்ச்சோலையிலும், இலங்கையில் நல்லூர், சன்னிதி, கதிரமலை(கதிர்காமம்),மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்களிலும் மிகவும் சிறப்பாக இவ்விழா நடைபெற்று வருகின்றது.



கந்த சஷ்டி விரத முறை

விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று. 

கேதாரகௌரி விரதம் பூர்த்தி செய்து கந்த சஷ்டி விரதம் பிடிப்போர், காலையில் நீராடி பூசை முடித்துத் தீர்தத்தை உட்கொண்டு அதன் பின் கந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்கவும்.

ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் இவ்விரதத்தை தம் உடல் நிலைக்குத் தக்கதாக கடைப்பிடிப்பர். சிலர் ஆறு நாட்களும் எவ்வித அன்ன ஆகாரமின்றியும், சிலர் பானம் மட்டும் அருந்தியும், பலர் முதல் ஐந்து நாட்களும் ஒரு நேரம் உணவு உண்டு (பாலும் பழமும்) கடைசி நாளான ஆறாம் நாள் முழு உபவாசத்துடன் நித்திரை விழித்திருந்தும் ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின் பாரணை மூலம் விரதத்தைப் பூர்த்தி செய்வர்.



கந்த சஷ்டி விரதத்தில் படிக்க வேண்டியவை

இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் படித்தால், என்னவென்று சொல்ல முடியாத மனஅமைதி நிலவும். இதனை
ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர். 


கந்தசஷ்டி விரதத்தின் பலன்

குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். சுருக்கமாகச் சொன்னால் இவ் விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.