sai yoga centre

Friday, December 16, 2011

திருச்செந்தூர் திருநீறு


திருச்செந்தூர் அருகிலுள்ள குரும்பூர் கிராமத்தில் வசித்த கந்தவேல் கடும் உழைப்பாளி. நெசவாளியான அவன் எந்நாளும்  உழைத்தாலும், வருமானம் போதவில்லை. கஷ்டஜீவனமே நடந்தது. மனைவி வள்ளியம்மை சிறந்த முருகபக்தை. அவள் நாவில் எந்நேரமும் சரவணபவ என்ற மந்திரம் ஒலித்துக் கொண்டிருக்கும். மனைவியின் பக்தியில் கணவன் தலையிடமாட்டான். ஆனால், வள்ளியம்மைக்கோ தன் கணவரையும் முருக பக்தனாக்கி விட வேண்டுமென்று ஆசை.  ஒருநாள், அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார். அவர், பக்தர்களுக்கு தீட்சை அளித்தார். கணவனின் அனுமதி பெற்று, வள்ளியம்மையும் தீட்சை பெற்று வந்தாள். பின்னொரு நாளில், அவனையும் தீட்சை பெற அழைத்தாள். வள்ளி! உனக்கும், அந்த முருகனுக்கும் தெரியாதா நம் நிலைமை! ஒரு நிமிடம் தறியை விட்டு இறங்கினாலும், அன்றைய புடவையை அன்றே நெய்ய முடியாதென்று! எவ்வளவோ வேகமாக பணி செய்தாலும் இரவாகி விடுகிறது.
பணி முடிய! புடவையைக் கொண்டு கொடுத்தால் தானே கால் வயிற்று கஞ்சிக்குரிய கூலியாவது கிடைக்கிறது! இது புரியாமல் பேசுகிறாயே! என்றான் . அவளும், நீங்கள் உடலைப் பற்றி மட்டுமே கவலைப் படுகிறீர்கள்! இந்த உடலைப் பயன்படுத்தி ஆன்மாவுக்காக நாம் சேர்த்து வைக்க வேண்டிய சொத்தைப் பற்றி ஏன் கவலைப்படுவதில்லை. இந்த உழைப்பு, வறுமை, குடும்பம் போன்ற நிலைகளைக் கடந்து, அந்த செந்திலாண்டவனின் திருவடியை ஒருநாள் எட்ட வேண்டும். அதற்குரிய கடமையைச் செய்ய வேண்டாமா? என்பாள். அந்த ஆன்மிக அறிவுரை அவனுக்கு புரிந்தும் புரியாதது போலவும் இருக்கும். இருந்தாலும், அவன் தன் நிலையில் இருந்து மாறவில்லை. ஒருநாள், அந்த துறவியையே வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டாள் வள்ளியம்மை.  தம்பி! நீ தறியை விட்டு இறங்கி வந்து திருநீறு பூசிக்கொள், செந்திலாண்டவனின் பன்னீர் விபூதி உன்னைத் தேடி வந்துள்ளது என்றார்.  ஐயா! இதைப் பூச இறங்கும் நேரத்திற்குள் ஐந்தாறு இழை ஓடி விடும். எனக்கு உழைப்பே பிரதானம், என்று வேலை யிலேயே கவனமாக இருந்தான்.
பரவாயில்லை! இனி திருநீறு பூசிய முகத்தையாவது பார்த்துவிட்டு பணியைத் துவங்கு, என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அதை ஏற்றுக்கொண்ட கந்தவேல், பக்கத்து வீட்டு செந்தில் என்பவர் தன் வீட்டு ஜன்னல் வழியே பேச வரும் போது, அவர் முகத்தைப் பார்ப்பான். அவர் அடிக்கடி திருச்செந்தூர் செல்பவர், அங்கிருந்தே பன்னீர் இலை திருநீறு கொண்டு வந்து தினமும் பூசிக்கொள்பவர். ஒருநாள், அவரைக் காணவில்லை. நீறு பூசிய நெற்றியைக் காணாமல் பணி துவங்க முடியாதே. என்ன செய்யலாம்? என கருதி, அவர் ஒரு குளக்கரைக்கு சென்றதை அறிந்து அங்கே ஓடினான். குளக்கரையில் நின்ற அவரது கையில் இருந்த இரண்டு பெட்டிகளில் இரண்டு லட்சம் பணம் இருந்தது. பார்த்துவிட்டேன், பார்த்துவிட்டேன், என்று சொல்லிக்கொண்டே திரும்ப ஓடிவந்து தறியில் அமர்ந்து, ஓடிய நேரத்தை மிச்சப்படுத்த வேகமாக நெய்ய ஆரம்பித்து விட்டான் கந்தவேல். உண்மையில் அவன் பார்த்தது அவரது திருநீற்று நெற்றியைத் தான். சிறிதுநேரத்தில் செந்தில் வந்தார். வள்ளியை அழைத்து, வள்ளி! உன் கணவர் நான் வைத்திருந்த பணப் பெட்டிகளை பார்த்து விட்டார். இவை எனக்கு குளக்கரையில் கிடைத்தன. யாரோ அங்கே மறைத்து வைத்து விட்டு போயிருந்தார்கள். அதில் ஒன்றை உனக்கு தந்து விடுகிறேன். விஷயத்தை உன் கணவனைத் தவிர யாரிடமும் சொல்லாதே, எனச்சொல்லி திணித்து விட்டு போய்விட்டார். ஒன்றுமே இல்லாதவன் கையில் லட்சம் கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கும்! எல்லாம் பன்னீர் இலை திருநீற்றின் மகிமை என்றவாறே, கந்தவேலும் தீட்சை பெற்று முருகனை வணங்க நேரம் ஒதுக்கினான். மகிழ்ந்த வள்ளி முருகனுக்கு நன்றி சொன்னாள்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.