sai yoga centre

Friday, February 7, 2014

நவக்கிரக தோஷம் போக்கும் விரதம்

ஆயுள், ஆரோக்கியம் தரும் விரதங்கள் ஆண்டில் பல வந்தாலும் அனைத்திலும் சிறந்ததாகச் சொல்லப்படுவது ரத சப்தமி விரதமே. சூரிய உதய நேரத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராடச் செல்வது சிறப்பு. இயலாதவர்கள் அவரவர் இல்லத்தில் சிறிதளவாவது சூரிய ஒளிபடும் இடத்தில் நீராடலாம்.

நீராடும்போது, ஏழு எருக்கம் இலைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, அவற்றின் மீது சிறிது அரிசி, மஞ்சள், கோமயம் ஆகியவற்றை வைத்து அதனை அப்படியே உச்சந்தலையில் வைத்துக் கொண்டு நீரில் மூழ்கி எழ வேண்டும். வீட்டில் நீராடும் போது அவற்றைத் தலையில் வைத்துக் கொண்ட பின், தண்ணீர் ஊற்றிக் கொண்டு குளிக்கலாம்.

இப்படிச் செய்வதால் நாம் 7 பிறவிகளில் செய்த பாவங்கள் விலகி மறைந்து போகும். புண்ணிய பலன்கள் பெருகும் என்பது ஐதீகம். அன்றைய தினம் குளித்து முடித்த பின் சூரியனை நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின் தெரிந்த சூரிய துதிகளைச் சொல்ல வேண்டும்.

எந்த தெய்வத்தை வழிபடுகிறோமோ அந்த தெய்வத்தின் திருக்கரங்களில் நீர் வார்ப்பது போன்றது அர்க்கியம் விடுவது. எனவே ரத சப்தமியன்று சூரியனுக்கு அர்க்கியம் விடுவது முக்கியத்துவம் உடையது. சூரியனுக்கு உகந்த நிவேதனம் சர்க்கரைப் பொங்கல்.

பொங்கல் வைத்து அதை சூடு ஆறும் முன்பாக நைவேத் தியம் செய்துவிட வேண்டும். சூரியனுக்குப் படைத்த சர்க்கரை பொங்கலை பிறருக்கு விநியோகிப்பது சிறப்பான பலன் தரும். ரத சப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தேர்க்கோலம் போடுவது பலரது வழக்கம். இந்தக் கோலத்தினை வீட்டு வாசலில் போட்டு, அதன் வடமாக ஒரு கோட்டினை தெருவரை நீளும்படி வரைவதும் உண்டு.

நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் ரதசப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார். அன்றைய தினம் விரதம் இருப்பது நீடித்த ஆயுளும், குறையாத ஆராக்கியமும் அளிக்கும் என்பது நம்பிக்கை.

இவ்விரதம் இருப்பது சுமங்கலித்துவம் நிலைக்கச் செய்யும் எனவும் சொல்கிறார்கள். ரதசப்தமி தினத்தில் வழிபடும்போது, சூரியனை நோக்கி, "ஓம் நமோ ஆதித் யாய... ஆயுள், ஆரோக்கியம், புத்திர் பலம் தேஹிமே சதா'' என்று சொல்லி வணங்கலாம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.