sai yoga centre

Friday, December 23, 2011

அனுமனுக்கு சிறப்பு சேர்க்கும் சுந்தரகாண்டம்!



அனுமன் பெருமை: சுந்தரகாண்டம் படித்தால் வேண்டுதல்கள் யாவும் ஈடேறும் என்பர். ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் அதை காண்டங்களாகப் பிரித்தார். அப்போது அவருக்கு ராமாயணத்தில் அரும்பெரும் செயல்கள் புரிந்த அனுமனுக்கு சிறப்பு சேர்க்க வேண்டும் எனத் தோன்றியது. எனவே ஏழுக்காண்டங்களுள் ஒன்றினை அனுமனின் பெயரால் சுந்தர காண்டம் என்று அமைத்து மகிழ்ந்தார். அனுமன் சொல்லின் செல்வன் என்பதற்கு எடுத்துக்காட்டாக சில காட்சி வசனங்களை அமைத்தார் கம்பர். அனுமன் முதன் முதலில் ராமனை சந்தித்த போது ராமபிரான் அவரிடம் நீ யார்? என்று கேட்டார்.

ராமனின் வினாவுக்கு, காற்றின் வேந்தர்க்கு அஞ்சனை வயிற்றில் வந்தேன் நாமமும் அனுமன் என்று தன்பெயருக்கு தன் பெற்றோர் யார் என்பதையும் சேர்த்து அடக்கமாக கூறினார். அனுமன் சீதையை தேடி இலங்கைக்குச் சென்றபோது அசோகவனத்தில் சீதை தற்கொலைக்கு முயற்சிப்பதைக் கண்டார். ஒரு நொடி தாமதித்தாலும் சீதை உயிர் நீத்துவிடுவாள் எனும் நிலை. அவளை என்ன சொல்லித் தடுப்பது? சட்டென்று ஜெய் ஸ்ரீராம் என்று சீதை காதுபட உரக்கக் கூறினார். ராம நாமம் கேட்பதும் அப்படியே நின்றாள் சீதை.

சீதா தேவியிடம் தாயே! நான் ராமபக்தன் என் பிரபு ஸ்ரீராமன் தங்களை விரைவில் சிறை மீட்டுச் செல்வார்....! என்றும் ஆறுதல் சொல்லி தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றினார். இலங்கையில் இருந்து திரும்பி வந்த அனுமன், ராமபிரானிடம், கண்டனென் கற்பினும் கணியை கண்களால் என்று ஒரே வரியில் சிதையைக் கண்டதையும் அவர் கற்புக்கரசியாக திகழ்வதையும் கூறினார். வால்மீகியும், கம்பனும் மட்டுமல்ல; இன்றும் கூட ராமாயணத்தினை யார், எந்த மொழியில் எழுதினாலும் எல்லோராலும் போற்றப்படுவராக இருப்பதே அனுமனின் பெருமை எனலாம்.

சிரமம் நீக்கும் சுந்தரகாண்டம்: இருபெரும் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்தில் ராமாயணம் முந்திய காவியம். அது நமக்கு அரிய பொக்கிஷங்களான இரண்டு ரத்தினங்களை நமக்கு தந்திருக்கிறது. ஒன்று பக்தர்களின் ரத்தினமான அனுமன்; மற்றொன்று மந்திரங்களின் ரத்தினமான சுந்தர காண்டம். ராமா என்ற நாமம் ஒன்றையே சதா ஜெபிக்கும் பக்தர்களில் தலைசிறந்த ரத்தினமாகத் திகழ்பவன் அனுமன். ராமா என்னும் இனிய திருநாமத்தைச் சொன்னால் நமக்கு அனுமனின் அருள் கிடைக்கும். மனித வாழ்வில் ஏற்படும் எந்த பிரச்னைக்கும் கை கண்ட மருந்தாக உடனடியாகத் தீர்வு தரும் பரிகாரம் சுந்தரகாண்டப் பாராயணம். ராமனைப் பிரிந்து துன்பத்தில் துவண்ட சீதாதேவியின் துயர் துடைக்க ராமநாமத்தின் மீது கொண்ட நம்பிக்கையால் கடலையும் தாண்டியவன் ராமபக்த அனுமன். அனுமன் மற்றும் சுந்தரகாண்டம் ஆகிய ரத்தினங்களின் மதிப்பை அறிந்தவர்கள் அதை நழுவ விட மாட்டார்கள். இம்மண்ணுலகில் வாழும் மனிதர்களால், கோடிக்கணக்கில் உள்ள ஸ்லோகங்களைப் படித்து ராமாயணத்தை அறிந்துகொள்ள முடியாது என்பதை உணர்ந்த வால்மீகி முனிவர் அதை இருபத்துநான்காயிரம் ஸ்லோகங்கள் கொண்ட சிறு காவியமாக உருவாக்கினார். இந்த பாரத நாடெங்கும் வால்மீகி ராமாயணத்துக்கு, எல்லையில்லாத பெருமையும் மதிப்பும் இருந்து வருகிறது. வேறு எந்தவொரு காவியத்துக்கும் இத்தனை பெருமை இருந்ததில்லை.

சுந்தர காண்டத்தில் எல்லாமே அழகுதான்!

பல கோடி பக்தர்கள் ஸ்ரீராமபிரானின் திவ்விய நாமத்தை நாள்தோறும் உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். ராமாயணத்தை ஆதிமுதல் அந்தம்வரை முழுவதும் படித்தால்தான் பண்ணிய பாவங்கள் போகும் என்பதில்லை. ராமாயணத்தில் உள்ள ஒவ்வொரு சொல்லும்கூட மகா பாவங்களைப் போக்கிவிடும் என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்தார்கள். ராமாயணத்தின் அருமை பெருமை குறித்தும், பிறவிப்பிணி நீக்கும் ராமநாமத்தின் மகிமை பற்றியும், எண்ணற்ற மகான்களும் ஞானிகளும் பலவாறு உபதேசிக்கிறார்கள். ராம வழிபாடு, ஆதிகாலத்திலிருந்தே உலகின் பல பாகங்களிலும் இருந்து வருகிறது. ராமாயணத்தில் ஒவ்வொரு காண்டத்துக்கும் தனித்தனியே பலன்கள் கூறப்பட்டுள்ளன. ஸ்ரீராம காதையின் ஏழு காண்டங்களில் ஐந்தாவது காண்டம் சுந்தர காண்டம். இது வளமான வாழ்வுக்கு உதவும் நித்திய பாராயண நூல். இந்த காண்டத்தின் நாயகர் ஆஞ்சநேயரே! ராமாயணம் என்ற அழகிய மாலையில், நடுமையமாக ரத்தினம்போல் ஆஞ்சநேயர் விளங்குகிறார். சுந்தர காண்டத்தில் ஆரம்பம் முதல் முடிவு வரையில் ஆஞ்சநேயரே நாயகனாக இருக்கிறார். அவருடைய பலம், பராக்கிரமம், புத்திக்கூர்மை, மகிமை, வீர்யம், சொல் திறமை ஆகியவை பற்றி சுந்தர காண்டம் அழகாக வர்ணிக்கிறது.

சுந்தர காண்டத்தின் பெருமை அளவிட முடியாதது. சுந்தர காண்ட பாராயணத்தால் அடைய முடியாதது எதுவுமே இல்லை என்ற நம்பிக்கை பக்தர்களின் உள்ளத்தில் வேரூன்றி இருக்கிறது. சுந்தர காண்ட பாராயணம், பல இடங்களில் பல விதங்களாக அனுஷ்டிக்கப்படுகிறது. பெரும்பாலும் மக்களிடையே ஏழேழு ஸர்க்கங்களாகப் பாராயணம் செய்யும் முறையே பரவலாக இருந்து வருகிறது. இரண்டு, மூன்று, ஐந்து என்று குறிப்பிட்ட நாள் கணக்கில் சுந்தர காண்டம் பாராயணம் செய்யும் முறையும், இன்ன பலனுக்காக இந்த ஸர்க்கம் பாராயணம் செய்யத் தகுந்தது என்ற நிர்ணயமும் உள்ளது. இவ்வாறு பல விதங்களில் சுந்தர காண்டம் பாராயணம் செய்வது பற்றி உமா சம்ஹிதையில் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

சுந்தர காண்டத்தில் அனுமன் காற்றின் வேந்தரான வாயு பகவானுக்கும் அஞ்சனையிடத்தும் பிறந்தவன். ஆசைகளைத் துறந்த தூயோன். சிவ அம்சம் பெற்றவன். தீவிர பிரம்மச்சாரி. சுக்ரீவன் நாடாண்ட காலத்தில், முதலமைச்சனாக இருந்து நாட்டைக் காத்த நல்லவன். சுக்ரீவன் நாடாண்ட காலத்தும், நாடிழந்து தன் மனைப் பூவையை இழந்து மலைக் குகையில் ஒளிந்திருந்த காலத்தும், உடனிருந்து அன்பு செய்த உத்தமன் அனுமன்.

ராமபிரானுக்கு, ஆறாவது சகோதரனாக சுக்ரீவனைச் சேர்த்த சீராளன். தேன்மொழியாளாம் சீதை தென் இலங்கையில் உள்ளாள் என்பதை உளவறியச் சென்றவனும் அவனே! நாயகன் இல்லாக் குறையாலும், நரம்பிசையில் வல்லோனான ராவணனின் எல்லையில்லாத் தொல்லையாலும் தன்னுயிரையே இழக்கத் துணிந்த சீதையின் ஆரூயிரைக் காத்தவன். வல்வில் ராமனின் தூதன் என்று விஸ்வரூபம் காட்டி, சீதைக்குத் தரிசனம் தந்தவன். அன்னையின் அச்சம் தீர்த்தவன். ரகு ராமனின் பிரவேசமும் ராவண வதமும் நடைபெறுவதற்கு அச்சாரமாக, அட்சயகுமாரனைத் தேய்த்தழித்து அங்குரார்ப்பணம் செய்ததோடு, அழகிய அசோகவனத்தையும் அழித்தவன். அக்னிதேவனின் வயிற்றுப்பசி தீர்க்க இலங்கையைக் கொளுத்தி, வாஸ்து சாந்தி செய்தவனும் அனுமனே! அரக்கன் விபீஷணனை இன்னொரு சகோதரனாக உளமாற ஏற்றுக்கொள்ள, ராமனுக்கு அக்கறையோடு ஆலோசனை அளித்தவனும் அனுமனே! இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்தால் அனைவரும் மூர்ச்சித்து விழுந்தபோது, அனுமன் ஒருவனே உயிர்பெற்று சமயத்தில் சஞ்சீவிமலை கொண்டுவந்து அனைவரையும் காப்பாற்றியவன். ராமனின் வெற்றிக்குக் கொடியாய் இருந்தவன்; சீதையை மீட்கத் துணை நின்றவன்; நந்திக் கிராமத்தில் ராமன் வரவைப் பற்றி பரதனுக்குச் சாற்றி அந்த உத்தமனின் உயிரைக் காத்தவன்.

உரிய காலத்தில் அண்ணனுக்குப் பட்டம் சூட வழிவகுத்தவன். ராமனின் பாத சேவை ஒன்றே பரமானந்தம் தரக்கூடியது என்பதை உணர்ந்த உத்தமன். சீதையின் திருவாக்கால் சிரஞ்சீவி பட்டம்பெற்ற ஆஞ்சநேயன். எந்த யுகத்திலும் ஜீவிக்கக்கூடிய ராமபக்தன். அவரின் ராம பக்தி அளவிட முடியாதது. இவ்வாறாக அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயரின் பெருமை பற்றிக் கூறுகிறது சுந்தர காண்டம். அனுமனுடைய ஆற்றல், அறிவு, செயல்திறன், வீரம், விவேகம், வாக்கு சாதுர்யம், முயற்சி, தன்னடக்கம், ராம பக்தி போன்ற பல உயர்குணங்கள் எல்லாம் சுந்தர காண்டத்தில்தான் முழுமையாக வெளிப்படுகின்றன. அற்புதமான சுந்தர காண்டம் பற்றிய அழகான ஸ்லோகம் இது.

ஸுந்தரே ஸுந்தரோ ராம:
ஸுந்தரே ஸுந்தரி கதா
ஸுந்தரே ஸுந்தரி ஸீதா
ஸுந்தரே ஸுந்தரம் வநம்
ஸுந்தரே ஸுந்தரம் காவ்யம்
ஸுந்தரே ஸுந்தரோ கபி:
ஸுந்தரே ஸுந்தரம் மந்த்ரம்
ஸுந்தரே கிம் ந ஸுந்தரம்

அழகான சுந்தர காண்டத்தில் ராமபிரான் அழகு; அன்னை சீதா அழகு; சுந்தர காண்டம் கதை அழகு; அசோகவனம் அழகு; வானரர்கள் அழகு; சுந்தர காண்டத்தில் உள்ள சொற்கள் அழகு; நல்ல பலனைக் கொடுக்கும் மந்திரங்கள் அழகு; காண்டம் முழுவதும் காணப்படும் அனுமன் அழகு. சுந்தர காண்டத்தில் எல்லாமே அழகுதான்!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.